search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நான்கு நாடுகள் கிரிக்கெட்: இந்தியா ‘ஏ’ அணி அசத்தல் வெற்றி
    X

    நான்கு நாடுகள் கிரிக்கெட்: இந்தியா ‘ஏ’ அணி அசத்தல் வெற்றி

    நான்கு நாடுகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா ‘ஏ’ அணி நேஷனல் பெர்பார்மன்ஸ் அணியை வீழ்த்தியது.
    ஆஸ்திரேலியாவில் இந்தியா ‘ஏ’, ஆஸ்திரேலியா ‘ஏ’, தென்ஆப்பிரிக்கா ‘ஏ’, நேஷனல் பெர்பார்மன்ஸ் அணிகள் மோதும் ‘நான்கு நாடுகளுக்கிடையிலான ஒரு நாள் கிரிக்கெட்’ தொடர் நடைபெற்று வருகிறது.

    இன்றைய போட்டியில் இந்தியா ‘ஏ’ - நேஷனல் பெர்பார்மன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா ‘ஏ’ அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நேஷனல் பெர்பார்மன்ஸ் அணி 207 ரன்னில் சுருண்டது. வருண் ஆரோன் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    பின்னர் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணியின் மந்தீப் சிங், கருண் நாயர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மந்தீப் சிங் 4 ரன்னிலும், கருண் நாயர் 14 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அதன்பின் வந்த ஷ்ரேயாஸ் அய்யர் சிறப்பாக விளையாடினார். ஆனால் அவருடன் இணைந்த மணீஷ் பாண்டே 10 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். இதனால் இந்தியா 41 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்து தத்தளித்தது.

    4-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் அய்யர் உடன் கேதர் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மிகவும் அருமையாக விளையாடி இந்தியா ‘ஏ’ அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றது. அரைசதம் அடித்த அய்யர் 62 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

    ஜாதவ் 93 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இவர்களின் ஆட்டத்தால் இந்தியா ‘ஏ’ அணி 38.2 ஓவர்களிலேயே 4 விக்கெட்டை மட்டுமே இழந்து இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஏ அணி 16 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 30-ந்தேதி கடைசி லீக்கில் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணியுடன் மோதுகிறது.

    லீக் போட்டிகள் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் மோதும்.
    Next Story
    ×