search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாதனை நாயகி சிந்துவுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து: 1 கோடி ரூபாய் பரிசு அறிவித்தது தெலுங்கானா அரசு
    X

    சாதனை நாயகி சிந்துவுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து: 1 கோடி ரூபாய் பரிசு அறிவித்தது தெலுங்கானா அரசு

    ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்த பி.வி.சிந்துவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். ஒலிம்பிக் அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்தவண்ணம் உள்ளன. அவரது ஆட்டத்திறனைப் பாராட்டி சமூக வலைத்தளத்தில் ஏராளமானோர் கருத்துக்களை பதிவு செய்த வண்ணம் உள்ளனர்.

    ‘சிறப்பாக விளையாடி வெள்ளி வென்ற சிந்துவுக்கு வாழ்த்துக்கள்’ என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

    ‘வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்துவுக்கு வாழ்த்துக்கள். மிகவும் சிறப்பாக போராடினீர்கள். ரியோ ஒலிம்பிக்கில் நீங்கள் படைத்த இந்த சாதனை வரலாற்றில் இடம்பெற்றதுடன், பல ஆண்டுகள் நினைவில் கொள்ளப்பட வேண்டும்’ என பிரதமர் மோடி டுவிட் செய்துள்ளார்.

    பேட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்த், மத்திய மந்திரிகள் வெங்கையா நாயுடு, ராஜ்நாத் சிங், நிர்மலா சீத்தாராமன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி, தி.மு.க. தலைவர் கருணாநிதி, கிரிக்கெட் பிரபலங்கள் சச்சின், அஷ்வின், திரையுலக பிரபலங்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மோகன் லால், தமன்னா, ஆலியா பட், ரசூல்பூக்குட்டி, வித்யாபாலன், வெங்கட் பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    சிந்துவின் சாதனையை கவுரவிக்கும் வகையில் அவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. 50 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்தார். இதுதவிர பேட்மிண்டன் சம்மௌனம் 50 லட்சம் ரூபாய் அறிவித்துள்ளது. பயிற்சியாளருக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என கூறியுள்ளது.
    Next Story
    ×