search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பல்லேகெலே டெஸ்ட்: 106 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை
    X

    பல்லேகெலே டெஸ்ட்: 106 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை

    பல்லேகெலேயில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இலங்கை அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    இலங்கை- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பல்லேகெலேயில் நடைபெற்றது.

    ஆஸ்திரேலியா அணிக்கு 268 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 268 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்மித் 26 ரன்னுடனும், வோக்ஸ் 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. காலையில் மழை பெய்ததால் ஆட்டம் காலதாமதமாக தொடங்கியது. ஆட்டம் தொடங்கியதும் மேலும் 3 ரன்கள் எடுத்த நிலையில் வோக்ஸ், ஹெராத் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஷேன் மார்ஷ் 25 ரன்கள் எடுத்த நிலையில் ஹெராத் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார். மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன் அரை சதம் அடித்து போராடிய கேப்டன் ஸ்மித் 55 ரன்னில் ஆட்டம் இழந்தார். இந்த விக்கெட்டையும் ஹெராத் வீழ்த்தினார்.

    அதன்பின் வந்த ஸ்டார்க் ரன் எதுவும் எடுக்காமலும், லயன் 8 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அப்போது ஆஸ்திரேலியா அணி 56.1 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்திருந்தது.

    9-வது விக்கெட்டுக்கு விக்கெட் கீப்பர் நெவில் உடன் சுழற்பந்து வீச்சாளர் ஓ'கீபே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ரன்ஏதும் அடிக்கவில்லை. ஆனால், இலங்கை அணியின் பந்து வீச்சை திறமையாக எதிர்கொண்டது. 20 ஓவர்களுக்கு மேல் மெய்டனாக்கியது. ரன்கள் சேர்ப்பதைப் பற்றி கவலைப்படாமல் அணியை எப்படியாவது ‘டிரா’ நோக்கி அழைத்துச் சென்று விட வேண்டும் என்று நினைத்தது.

    இறுதியில் 86-வது ஓவரின் கடைசி பந்தில் நெவில் ஆட்டம் இழந்தார். இவர் 115 பந்துகளை சந்தித்து 9 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 178 பந்துகளை சந்தித்து (29.5 ஓவர்கள்) 4 ரன்கள் மட்டுமே எடுத்தது. நெவில் அவுட்டானதும், ஓ'கீபே 98 பந்துகளை சந்தித்து 4 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதனால் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 161 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ஆகவே, இலங்கை அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    2-வது இன்னிங்சில் 176 ரன்கள் குவித்து குசால் மெண்டிஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை 1-0 என முன்னிலையில் உள்ளது. 2-வது டெஸ்ட் காலேயில் 4-ந்தேதி தொடங்குகிறது.
    Next Story
    ×