search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பார்முலா-1 கார் பந்தயம்: 7-வது சுற்றில் இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் முதலிடம்
    X

    பார்முலா-1 கார் பந்தயம்: 7-வது சுற்றில் இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் முதலிடம்

    பார்முலா-1 கார் பந்தயத்தின் 7-வது சுற்று போட்டியில் இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் முதலிடம் பிடித்தார்.
    மான்ட்ரியல்:

    பார்முலா-1 கார் பந்தயம் 21 சுற்றுகளை கொண்டதாகும். இதன் 7-வது சுற்றான கனடா கிராண்ட்பிரி போட்டி மான்ட்ரியலில் நேற்று முன்தினம் நடந்தது. 305 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த பந்தயத்தில் மொத்தம் 22 பேர் கலந்து கொண்டனர்.

    விறுவிறுப்பான இந்த போட்டியில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன், ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் இடையே முதல் இடத்தை பிடிப்பதில் கடும் போட்டி நிலவியது. கடைசி கட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 31 நிமிடம் 05.296 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து முதலிடத்தை பிடித்தார். இந்த சீசனில் ஹாமில்டன் பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். இந்த வெற்றியை மறைந்த குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலிக்கு அர்ப்பணிப்பதாக ஹாமில்டன் தெரிவித்துள்ளார்.

    5.111 வினாடிகள் கூடுதல் நேரம் எடுத்து கொண்ட ஜெர்மனி வீரர் (பெராரீ அணி) செபாஸ்டியன் வெட்டல் 2-வது இடத்தை பிடித்தார். பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் (வில்லியம்ஸ் மெர்சிடஸ் அணி) 3-வது இடம் பெற்றார். முதல் 4 சுற்று பந்தயங்களில் வெற்றி பெற்ற ஜெர்மனி வீரர் நிகோ ரோஸ்பெர்க் 5-வது இடமே பிடித்தார். ஸ்போர்ஸ் இந்தியா அணி வீரர்கள் நிகோ ஹூல்கென்பெர்க் (ஜெர்மனி) 8-வது இடமும், செர்ஜியோ பெரேஸ் (மெக்சிகோ) 10-வது இடமும் பெற்றனர்.

    7-வது சுற்று முடிவில் ஜெர்மனி வீரர் நிகோ ரோஸ்பெர்க் 116 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் 107 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் 78 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

    இந்த போட்டியின் 8-வது சுற்று பந்தயமான ஐரோப்பிய கிராண்ட்பிரி போட்டி வருகிற 19-ந் தேதி நடக்கிறது.
    Next Story
    ×