search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹர்திக் பாண்டியா, நெஹிக்கு பேரிடியாக அமைந்த ஐ.பி.எல்.
    X

    ஹர்திக் பாண்டியா, நெஹிக்கு பேரிடியாக அமைந்த ஐ.பி.எல்.

    ஐ.பி.எல். தொடரில் சொதப்பியதால் ஹர்திக் பாண்டியா, நெஹிக்கு ஜிம்பாப்வே தொடரில் இடம் கிடைக்காமல் போனது. இனிமேல் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியே.
    ஐ.பி.எல். தொடர் சீசன் 9 முடியும் தருவாயில் உள்ளது. இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே மீதம் உள்ளது. இந்த ஐ.பி.எல். போட்டி தொடரில் இருந்து நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன் அணி வெளியேற்றப்பட்டுள்ளது.  அந்த அணி 14 போட்டிகளில் விளையாடி தலா 7 வெற்றி, 7 தோல்விகளுடன் 14 புள்ளிகளுடன் 5-வது இடத்தை பிடித்தது.

    மும்பை இந்தியன்ஸ் சாம்பியன் பட்டத்திற்கான போட்டியில் இருந்து வெளியேறியது அந்த அணியின் உரிமையானர், பயிற்சியாளர், கேப்டன் ஆகியோருக்கு ஏமாற்றத்தை அளித்ததோ இல்லையோ, ஹர்திக் பாண்டியாவிற்கு உண்மையிலேயே பெரிய ஏமாற்றத்தை அளித்தது.

    இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அப்போது டி20 தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இடம்பிடித்தார்.

    இந்த தொடரில் அதிகம் சாதிக்கவில்லை என்றாலும், தனது அபார பீல்டிங், மைதானத்தில் சுறுசுறுப்பாக இயங்குவது போன்றவற்றால் அனைவரது பார்வையையும் ஈர்த்தார். மேலும், டோனி கொடுக்கும் சிறிய வாய்ப்பை பயன்படுத்தி அவ்வப்போது ஒன்றிரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இதனால் டோனியின் நம்பிக்கையை பெற்றார்.

    அதன்பின் தற்போது நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை வரை தொடர்ந்து 16 டி20 போட்டிகளில் இந்திய அணியில் இடம்பிடித்தார்.

    ஆனால் இந்த ஐ.பி.எல். தொடர் அவருக்கு பேரிடியாக அமைந்துவிட்டது. ஆம். இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா 11 போட்டிகளில் களம் இறக்கப்பட்டார். இதில் மூன்று விக்கெட்டுக்கள் மட்டுமே வீழ்த்தினார். அத்துடன் 44 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதன்விளைவு ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்காமல் போனது. மாறாக உள்நாடடு போட்டியில் கலக்கிய பைஸ் பாசல், யுவேந்திர சாஹல், ஜயந்த் யாதவ் போன்றோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

    மற்றொரு பரிதாப வீரர் இடது கை சுழற்பந்து வீச்சாளர் பவன் நெஹி. இந்திய அணியில் ஜடேஜா இடம்பெறாவிடில் அந்த இடத்திற்கு அக்சார் பட்டேல் உடன் சரிசம போட்டியாளராக இருந்தவர்.

    டெல்லி அணி பவனை சுமார் 8.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. டெல்லி அணி விளையாடிய 14 போட்டியிலும் விளையாடும் வாய்ப்பு நெஹிக்கு கிடைக்கவில்லை. அந்த அணிக்காக 8 போட்டிகளில் விளையாடிய அவர் 57 ரன்கள் மட்டுமே எடுத்தார். அத்துடன் ஒரு விக்கெட்டுடன் ஏமாற்றம் அளித்தார்.



    தேர்வாளர்களின் பார்வை இந்த இருவரின் மீது விழாமல் போனது பெரிய ஏமாற்றம். இந்த தொடரில் கோலி, ரோகித் சர்மா, தவான் போன்ற முக்கிய வீரர்கள் இடம்பெறாமல் இருக்கையில் இவர்கள் இடம்பிடித்தால் ஆடும் லெவனில் உறுதியாக இடம்பெற்றிருக்கலாம்.

    இனிமேல் தொடர்ச்சியாக இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கும் நிலையில் இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியே.
    Next Story
    ×