search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என் வழி தனி வழி: விராட் யோசனையை கேட்காத டி வில்லியர்ஸ்
    X

    என் வழி தனி வழி: விராட் யோசனையை கேட்காத டி வில்லியர்ஸ்

    என் வழி தனி வழி. என்னுடைய மனம்போல்தான் விளையாடுவேன் எனக்கூறி கோலியின் ஆலோசனையை டி வில்லியர்ஸ் ஏற்கவில்லை.
    தற்போதைய சூழ்நிலையில் எந்தவொரு ஸ்கோரையும் சேஸிங் செய்யும் வல்லமை படைத்தவர்கள் விராட் கோலி மற்றும் டி வில்லியர்ஸ். ஆனால், இருவருடைய வழிகளும் வெவ்வேறாக உள்ளன. பொதுவாக, விராட் கோலி சேஸிங் செய்யும்போது உன்னிப்பாக திட்டம் தீட்டி கணக்கு பாடத் தீர்வைப்போல் ஒன்றன்பின் ஒன்றாக செய்வார். ஒரு ஓவருக்கு எவ்வளவு ரன்கள் அடிக்க வேண்டும். எந்த பவுலரை தேர்வு செய்து அடிப்பது என தனக்குள் கணக்கு போட்டு விளையாடுவார்.

    ஆனால், டி வில்லியர்ஸ் வேறு மாதிரி. களத்தில் இறங்கி முதல் பந்து நடு பேட்டில் மீட்டாகிவிட்டது என்றால் அதன்பின் 360 டிகிரிதான். மைதானத்தின் அனைத்து பக்கமும் பந்து பறக்க ஆரம்பித்து விடும். அவர் தன்னுடைய தனித்துவமான வழியி்ல் விளையாடுவார்.

    நேற்றைய முக்கியமான போட்டியில் விராட் கோலி 20 பந்திற்கு 29 ரன்கள் எடுத்திருந்தார். குல்கர்னி பந்து வீச்சில் மிரட்டியதால் அவரது பந்தை கவனமாக விளையாடினார். அதேபோல் ஜடேஜா பந்தில் விக்கெட் இழக்கக்கூடாது என்று நிலைத்து நின்றார். அதன்பின் வெயின் ஸ்மித், ஜகாதி பந்தை துவம்சம் செய்து விட்டார். இதனால் அடுத்த 27 பந்தில் 50 ரன்கள் குவித்தார். இதுதான் அவருடைய தனிச்சிறப்பு.

    போட்டி முடிந்த பின் நிருபர்களுக்கு டிவில்லியர்ஸ் பேட்டியளித்தார். அப்போது போட்டிக்கு முன் நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவத்தை நினைவு கூர்ந்தார். அவர் கூறியதாவது:-

    இது வேடிக்கையான விஷயம். நானும் விராட் கோலியும் போட்டி தொடங்குவதற்கு முன் பேசிக்கொண்டோம். அப்போது, விராட் கோலி முழு ஆற்றலையும் கொண்டு ஏராளமான ஆலோசனைகள் வழங்கினார். உண்மையிலேயே கோலி மிகவும் ஆற்றல் வாய்ந்தவர். அப்போது அவரிடம், ‘விராட்,  நான் வழக்கமாக என்னுடைய ஸ்டைலில்தான் விளையாடுவேன் என்று உங்களுக்கு தெரியும். நான் அதிகம் யோசிக்கமாட்டேன். நீங்கள் சிந்திக்கக்கூடியவர். நான் பெரிய அளவில் சிந்திக்கமாட்டேன். போட்டி எப்படி சென்று கொண்டிருக்கிறது என்று மதிப்பீடு செய்ய முயற்சிப்பேன். ஆனால், அதிக அளவில் சிந்திக்கமாட்டேன்‘ என்றேன்.

    வெற்றி பெற்ற பிறகு இது எளிதானது என்று தற்போது கூறலாம். ஆனால், நான் 100 சதவீதம் உறுதியாக அதில் இல்லை. நான் கடைசி மூன்று ஓவருக்குள் அவுட்டாகியிருந்தால் கடினமாக இருந்திருக்கும் என்று எல்லோரும் கூறுகிறார்கள். ஆனால், சரியான திசையில்தான் அணி சென்றது. ஆனால், நான் என்னுடைய தனித்துவத்தைதான் கடைப்பிடித்தேன். பேட்டிங் செய்ய களம் இறங்கியதும், பந்தை கூர்ந்து கவனிக்க முயற்சி செய்வேன். இப்படித்தான் பல வருடங்களாக விளையாடி வருகிறேன்.
    பந்தை நன்றாக கவனித்து வெளியே அனுப்பிவிட்டால், பின்னர் எனது திறமையால் ஆட்டத்தை என்னால் திருப்பிவிட முடியும் என்று எனக்குத் தெரியும். கடுமையான நெருக்கடி மற்றும் அதிக அளவு பதட்டமாக இருக்கும்போதும் பெரும்பாலான இன்னிங்சில் நாங்கள் சிரித்த புன்னகையுடன்தான் இருந்தோம். இதுதான் எனக்கு முக்கியமானது. பந்தை கவனமாக பார்த்து சிறப்பாக விளையாட வேண்டும். இதுதான் என்னுடைய தனித்துவம். இதைத்தான் நான் சொல்ல விரும்புகிறேன். இவ்வாறு டிவில்லியர்ஸ் கூறினார்.
    Next Story
    ×