search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என்னை ஜெயிலில் தள்ள மத்திய அரசு திட்டம்: லல்லுபிரசாத் குற்றச்சாட்டு
    X

    என்னை ஜெயிலில் தள்ள மத்திய அரசு திட்டம்: லல்லுபிரசாத் குற்றச்சாட்டு

    என்னை ஜெயிலில் தள்ளி விட வேண்டும் என்று அனைத்து ஏற்பாடுகளும் செய்து தயாராக இருக்கிறார்கள் என லல்லுபிரசாத் கூறியுள்ளார்.

    பாட்னா:

    ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவராக லல்லு பிரசாத் யாதவ் 10-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இதையடுத்து தேசிய நிர்வாக குழு கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. அதில், லல்லுபிரசாத் யாதவ் பேசியதாவது:-

    வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தல் காலத்தில் நான் வெளியே இருக்க கூடாது என்று மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் கருதுகிறார்கள்.

    எனவே, எப்படியாவது என்னை ஜெயிலில் தள்ளி விட வேண்டும் என்று அனைத்து ஏற்பாடுகளும் செய்து தயாராக இருக்கிறார்கள். இதனால் நான் எந்த நேரத்திலும் ஜெயிலுக்கு போகலாம்.

    இதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. ஜெயிலில் இருந்தாலும் ராஜா போல வாழ்வேன். என்னை ராஞ்சி ஜெயிலில் கொண்டு அடைத்தாலும் அங்கும் ராஜ வாழ்க்கை வாழ்வேன். எனது ஆதரவாளர்கள் எனக்கு பழங்களை கொண்டு தருவார்கள். அதை உண்டு சந்தோ‌ஷமாக இருப்பேன்.

    என்னை ஜெயிலில் தள்ளி விட்டால் கட்சியை குலைத்து விடலாம் என்று கருதுகிறார்கள். அது ஒரு போதும் நடக்காது. நான் ஏற்கனவே 375 நாட்கள் ஜெயிலில் இருந்துள்ளேன். அப்போதும் ஜெயிலில் இருந்தபடி கட்சியை நடத்தினேன்.

    அதேபோல் இப்போது ஜெயிலில் அடைத்தாலும் கட்சியை வழிநடத்துவேன். தேர்தலில் சிறப்பான வெற்றியை கட்சி பெற வைப்பேன்.

    பிரதமர் மோடியும், அமித்ஷாவும் மக்களை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார்கள். இளைஞர்கள், ஏழைகள், விவசாயிகள் என அனைவரையும் அவர்கள் ஏமாற்றி இருக்கிறார்கள்.

    கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவோம் என்றார்கள். அது என்ன ஆனது? மோடி மஸ்தான் போல் மீண்டும் கண்கட்டி வித்தை காட்டலாம் என்று நினைக்கிறார்கள். இனி, ஒரு போதும் எடுபடாது.

    இவ்வாறு லல்லுபிரசாத் யாதவ் கூறினார்.

    Next Story
    ×