search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீன ராணுவ வீரர்கள் கல் வீசி தாக்கினார்கள்: இந்திய வீரர்கள் பதிலடி
    X

    சீன ராணுவ வீரர்கள் கல் வீசி தாக்கினார்கள்: இந்திய வீரர்கள் பதிலடி

    சீன ராணுவம் நேற்று இந்தியா சுதந்திர தினம் கொண்டாடிய சமயத்தில் லடாக் பகுதியில் ஊடுருவ முயன்றதால் இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கும் இடையே லேசான கை கலப்பு ஏற்பட்டது.

    புதுடெல்லி:

    இந்தியா, சீனா இடையே 4057 கிலோ மீட்டர் தொலைவுக்கு எல்லைப் பகுதி உள்ளது.

    இதில் காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், அருணாசல பிரதேசம், சிக்கிம் மாநிலங்களில் உள்ள எல்லைகளில் சீன ராணுவம் அடிக்கடி ஊடுருவியபடி உள்ளது. குறிப்பாக அருணாசல பிரதேசத்தில் பெரும் பகுதியை சீன ராணுவம் உரிமைக் கொண்டாடி வருகிறது.

    சீன ராணுவம் அடிக்கடி எல்லையில் அத்துமீறல்களில் ஈடுபடுகிறது. சிக்கிம்-பூடான்- திபெத் சந்திப்பில் உள்ள டோக்லாம் பகுதியில் சீனா சாலை அமைத்ததை இந்தியா கடந்த ஜூன் மாதம் தடுத்து நிறுத்தியது.

    இதனால் கடும் ஆத்திரத்தில் இருக்கும் சீன ராணுவம் நேற்று இந்தியா சுதந்திர தினம் கொண்டாடிய சமயத்தில் லடாக் பகுதியில் புக முயன்றது. நேற்று காலை 6 மணிக்கு, மீண்டும் 9 மணிக்கு என இரண்டு தடவை சீன ராணுவ வீரர்கள் இந்தியாவுக்குள் வர முயன்றனர்.

    இந்திய ராணுவ வீரர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி தக்க பதிலடி கொடுத்தனர். மனித சங்கிலி அமைத்து அரண்போல நின்று கொண்டு இந்திய வீரர்கள், சீன வீரர்களை இந்தியாவுக்குள் ஊடுருவ விடாமல் தடுத்தனர்.

    இதையடுத்து இந்திய வீரர்களுக்கும், சீன ராணுவ வீரர்களுக்கும் இடையே லேசான கை கலப்பு ஏற்பட்டது. பிறகு சிறிது நேரம் கழித்து சீன வீரர்கள் தங்கள் பகுதிக்கு திரும்பிச் சென்றனர்.

    தங்கள் பகுதியில் பதுங்கி இருந்து கொண்டு சீன வீரர்கள் கல் வீச்சில் ஈடுபட்டனர். இதில் இந்திய வீரர்கள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    இந்திய வீரர்களும் பதிலுக்கு கல் வீசினார்கள். அதில் சீன வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. நீண்ட நேரத்துக்கு பிறகு சீன வீரர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    சீனாவின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இது தொடர்பாக இந்திய-சீன ராணுவ உயர் அதிகாரிகள் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.

    Next Story
    ×