search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கற்பழிப்பு வழக்கில் கைதான காங். எம்.எல்.ஏ. ஜெயிலில் அடைப்பு: பதவியை ராஜினாமா செய்ய மறுப்பு
    X

    கற்பழிப்பு வழக்கில் கைதான காங். எம்.எல்.ஏ. ஜெயிலில் அடைப்பு: பதவியை ராஜினாமா செய்ய மறுப்பு

    என் மீது குற்றம் இல்லை என்பதால் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என கற்பழிப்பு வழக்கில் கைதாகி உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ. வின்சென்ட் தெரிவித்துள்ளார்.
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் மாவட்டம் கோவளம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் வின்சென்ட். இவரது வீடு திருவனந்த புரம் பாலராமபுரத்தில் உள்ளது. இவரது வீட்டு அருகே வசிக்கும் 51 வயதான ஒரு பெண் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    வின்சென்ட் எம்.எல்.ஏ. தனக்கு செல்போனிலும் நேரிலும் பாலியல் தொல்லை கொடுத்ததால் தான் தற்கொலைக்கு முயன்றதாக அந்த பெண் போலீசில் வாக்குமூலம் கொடுத்தார்.

    இதன் அடிப்படையில் போலீசார், எம்.எல்.ஏ. வின்சென்ட் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது இந்த குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து வின்சென்ட் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார்.

    அவரை நெய்யாற்றின் கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அவர், நெய்யாற்றின்கரை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதை தொடர்ந்து நெய்யாற்றின்கரை சப்-ஜெயிலில் வின்சென்ட் எம்.எல்.ஏ. அடைக்கப்பட்டார்.

    கேரளாவில் கற்பழிப்பு வழக்கில் எம்.எல்.ஏ. ஒருவர் கைது செய்யப்படுவது இது தான் முதல் முறையாகும்.

    என் மீது புகார் கூறிய அந்த பெண் எனது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் என்ற முறையில் எனக்கு அறிமுகம் உண்டு. மேலும் அவர், நடத்தி வரும் கடையில் ஏற்பட்ட பிரச்சினைக்காக சிலர் மீது புகார் கூற அடிக்கடி எனது வீட்டிற்கும் வந்துள்ளார்.

    எனது செல்போன் நம்பர் அவருக்கு தெரியும் என்பதால் தனது பிரச்சினைகள் பற்றி அடிக்கடி என்னிடம் போனில் பேசுவார். நானும் அவருக்கு எம்.எல்.ஏ. என்ற முறையில் உதவி செய்துள்ளேன். தற்போது யாரோ தூண்டுதலின் காரணமாக என் மீது அவர் பொய் புகார் கூறி உள்ளார். என் மீது குற்றம் இல்லை என்பதால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எம்.எல்.ஏ. வின்சென்ட் மீது கற்பழிப்பு புகார் கூறிய அந்த பெண்ணுக்கும் நேற்று நெய்யாற்றின்கரை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவப் பரிசோதனை நடந்தது. அப்போது தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி அந்த பெண் நிருபர்களிடம் கூறினார்.

    வின்சென்ட் எம்.எல்.ஏ. எனக்கு 1½ வருடங்களாக உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். அவர் என்னை மிரட்டியதால் இதுபற்றி நான், வெளியில் சொல்லாமல் இருந்து வந்தேன். அவரது கொடுமை அதிகரித்ததாலும் என்னைப்போல வேறு பெண்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும் தற்போது புகார் செய்தேன் என்றார்.

    போலீசார் விசாரணையில், வின்சென்ட் எம்.எல்.ஏ.வும் அவர் மீது புகார் கூறிய பெண்ணும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 328 முறை செல்போனில் பேசி உள்ளது தெரிய வந்தது. இதில் 126 முறை எம்.எல்.ஏ. தனது போனில் இருந்து அந்த பெண்ணை தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.

    அவர்கள் பேச்சு அடங்கிய ஆடியோ பதிவை போலீசார் கைப்பற்றினார்கள். இது இந்த வழக்கில் முக்கிய தடயமாக போலீசாருக்கு கிடைத்தது.

    இதற்கிடையில் வின்சென்ட் எம்.எல்.ஏ.வை கண்டித்தும், அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யக்கோரியும் கம்யூனிஸ்டு கட்சியினர் அவரது கொடும் பாவியை எரித்து போராட்டம் நடத்தினார்கள்.

    கற்பழிப்பு புகாரில் கைதான வின்சென்ட் எம்.எல்.ஏ.வை போலீசார் நெய்யாற்றின்கரை ஜெயிலில் அடைக்க போலீஸ் ஜீப்பில் அழைத்துச் சென்றனர். அப்போது அவருக்கு ஆதரவாக இளைஞர் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் போலீசுக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினார்கள். போலீஸ் ஜீப் மீதும் கல்வீசப்பட்டது.

    இதில் சில போலீசாருக்கு காயம் ஏற்பட்டதால் பரபரப்பான சூழ்நிலை உருவானது. இதை தொடர்ந்து தடியடி நடத்தி இளைஞர் காங்கிரசாரை போலீசார் விரட்டியடித்தனர். இதனால் அவர்கள் சிதறி ஓடினார்கள்.இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பதட்டமான சூழ்நிலை நிலவியது.

    காங்கிரஸ் மூத்த தலைவரும் சட்டசபை எதிர்க்கட்சித்தலை வருமான ரமேஷ் சென்னிதலா கூறும்போது, வின்சென்ட் எம்.எல்.ஏ. கைதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. கம்யூனிஸ்டு கட்சியினரும் இதன் பின்னணியில் உள்ளனர் என்றார்.
    Next Story
    ×