search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்கள் பற்றி ஆபாச பேச்சு: மந்திரி மணி ராஜினாமா செய்வாரா?
    X

    பெண்கள் பற்றி ஆபாச பேச்சு: மந்திரி மணி ராஜினாமா செய்வாரா?

    கேரள மந்திரி மணி ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி அவருக்கு எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுத்துள்ளது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பினராய் விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இவரது மந்திரி சபையில் மின்சாரத்துறை மந்திரியாக இருப்பவர் எம்.எம். மணி. இவர், கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவராகவும் உள்ளார்.

    மணி தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி, அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வழக்கம். மந்திரி பதவி கிடைத்த பிறகும் அவர், தனது இந்த சர்ச்சை பேச்சை கைவிடவில்லை.

    சமீபத்தில் இடுக்கியில் நடந்த கூட்டத்தில் பேசிய, மணி பெண்கள் ஒற்றுமை இயக்கம் என்ற பெண் தோட்ட தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்களை பற்றி ஆபாசமான கருத்துக்களை வெளியிட்டார். தோட்ட பெண் தொழிலாளர்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதாகவும், பல பெண்கள் குடித்துவிட்டு கும்மாளம் அடிப்பதாகவும் கூறியது தற்போது கேரளாவில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்த சங்கத்தில் தமிழக பெண் தொழிலாளர்களும் ஏராளமானோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

    இதை தொடர்ந்து மந்திரி மணி தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கேரள சட்டசபையின் 60-வது ஆண்டு விழாவையொட்டி நேற்று கேரள அரசு தலைமை செயலகத்தில் முதல்-மந்திரி பினராய் விஜயன் தலைமையில் அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக மந்திரி மணி காரில் சென்றார்.

    அப்போது அவரது காரை மாணவர் காங்கிரசார் முற்றுகையிட்டு மந்திரி மணிக்கு கருப்புக்கொடி காட்டினார்கள். மேலும் அவர் ராஜினாமா செய்யக்கோரி கோ‌ஷங்களும் எழுப்பினார்கள்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் போராட்டம் நடத்திய காங்கிரசாரை அங்கிருந்து விரட்டியடித்தனர்.

    மேலும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் எதிர்க்கட்சி தலைவரான ரமேஷ் சென்னிதலா தலைமையில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் பேசிய ரமேஷ் சென்னிதலா, பெண்களை அவமரியாதையாக பேசிய மணி, மந்திரி பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும். அவர், அந்த பதவியில் நீடிப்பது கேரள மாநிலத்திற்கு இழுக்கு. அவர் ராஜினாமா செய்யும் வரை காங்கிரஸ் போராட்டம் நடத்தும் என்றார்.

    இதற்கிடையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் மாநில பொதுச்செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில், கட்சியின் மூத்த தலைவர் அச்சுதானந்தன், மந்திரி மணி மற்றும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். கொடியேறி பாலகிருஷ்ணன் பேசும் போது, கம்யூனிஸ்டு கட்சியில் செயல்பாடுகளுக்கு மாறுபட்டு மணி இப்படி பேசியது தவறு. மணியின் பேச்சு எதிர்ப்பை கிளப்பி கட்சிக்கு இழுக்கை ஏற்படுத்தி உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.

    மேலும் பல நிர்வாகிகளும் மந்திரி மணிக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தனர். அவர்கள் பேச்சுக்களை மந்திரி மணி, அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார். அவர், கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

    மூணாறில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டியும், மந்திரி மணி ராஜினாமா செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

    கேரள சட்டசபையிலும் மந்திரி மணியின் சர்ச்சை பேச்சு தொடர்ந்து புயலை கிளப்பி வருகிறது. நேற்று 2-வது நாளாக எதிர்க்கட்சிகள் மணி ராஜினாமா செய்ய வேண்டுமென்று அமளியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு பதில் அளித்து முதல்-மந்திரி பினராய் விஜயன் பேசும் போது, மந்திரி மணி பெண்கள் பற்றி தவறாக எதுவும் பேசவில்லை. எனவே அவர் பதவி விலக தேவையில்லை என்றார். ஆனாலும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து சபாநாயகர் சபையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.

    மந்திரி மணி ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி அவருக்கு எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுத்துள்ளது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×