search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோனியா காந்தி உடன் சரத் பவார் திடீர் சந்திப்பு
    X

    சோனியா காந்தி உடன் சரத் பவார் திடீர் சந்திப்பு

    எதிர்க்கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை முன்னிறுத்துவது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி உடன் தேசிய வாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
    புதுடெல்லி:

    ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை இறுதியில் நிறைவடைகிறது. அதற்கு முன்பாக அந்த பதவிக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.

    இந்த நிலையில், பா.ஜனதா சார்பில் ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளரை தேர்வு செய்யவும், தேர்தல் குறித்து வியூகம் அமைக்கவும் பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. ஜனாதிபதி பதவிக்கு பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மற்றும் மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன.

    எதிர்க்கட்சிகள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக யாரை முன்னிறுத்துவது? என்பது தொடர்பான ஆலோசனையில் காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் பா.ஜ.க.வை எதிர்க்கும் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

    இதுதொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட பலரும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக சோனியா காந்தியை தேசிய வாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் இன்று சந்தித்தார்.

    இந்த சந்திப்பு தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தரிக் அன்வர் கூறுகையில், “சரத் பவார் சோனியா காந்தியை சந்தித்தார். ஜனாதிபதி தேர்தலுக்காக மாபெரும் கூட்டணி அமைப்பதற்கான பணியை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். இந்த பேச்சுவார்த்தை ஜனாதிபதி தேர்தலுக்கானது மட்டுமல்ல 2019 மக்களவை தேர்தலுக்கும் தான்” என்றார்.

    முன்னதாக சோனியா காந்தியை ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் நேற்று சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×