search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜஸ்தானில் 12 காங். எம்.எல்.ஏ.க்கள் ஓராண்டு சஸ்பெண்ட்: மன்னிப்பு கேட்டதால் ஒரு நாளாக குறைப்பு
    X

    ராஜஸ்தானில் 12 காங். எம்.எல்.ஏ.க்கள் ஓராண்டு சஸ்பெண்ட்: மன்னிப்பு கேட்டதால் ஒரு நாளாக குறைப்பு

    ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டதால், ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மன்னிப்பு கேட்டதையடுத்து, சஸ்பெண்ட் காலம் ஒரு நாளாக குறைக்கப்பட்டது.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்தில், மாநில ஜி.எஸ்.டி. மசோதாவை நிறைவேற்றுவதற்காக சிறப்பு சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றது. இந்த சிறப்பு அமர்வின் கடைசி நாளான இன்றைய கேள்வி நேரத்தின்போது, எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் துணை கொறடா துணைக் கேள்வி எழுப்ப முயன்றார். அதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. இதனால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    அவர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால், சபாநாயகரின் உத்தரவின்பேரில் 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட 14 எம்.எல்.எ.க்கள் அவைக்காவலர்கள் மூலம் வெளியேற்றப்பட்டனர். அவையும் ஒத்திவைக்கப்பட்டது.

    பின்னர் சபை கூடியதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒழுங்கீனமாக நடந்துகொள்வதை பொறுத்துக்கொள்ள முடியாது என சபாநாயகர் எச்சரித்தார். அத்துடன், 14 எம்.எல்.ஏ.க்களையும் ஓராண்டுக்கு சட்டசபை நிகழ்வுகளில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என ஆளுங்கட்சி கொறடா தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பின்மூலம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, 14 எம்.எல்.ஏ.க்களுக்கும் ஓராண்டுக்கு சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் அறிவித்தார்.

    பின்னர், விவாதம் நடைபெற்றபோது, காங்கிரஸ் உறுப்பினர்களின் செயல்களுக்கு கட்சி சார்பில் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் பிரத்யூமன் சிங் தெரிவித்தார். மேலும், தடை உத்தரவை மறுபரிசீலனை செய்யும்படி சபாநாயகருக்கு வேண்டுகோள் விடுத்தார். சஸ்பெண்ட் காலத்தை குறைக்கும்படி முதலமைச்சர் வசுந்தரா ராஜே மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ராஜேந்திர ரத்தோர் ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.

    இதையடுத்து காங்கிரஸ் உறுப்பினர்கள் 12 பேர் மீதான ஓராண்டு சஸ்பெண்ட் என்பதை, ஒரு நாள் சஸ்பெண்ட் என மாற்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல் மற்ற இரண்டு எம்.எல்.ஏ.க்கள் மீதான, சஸ்பெண்ட் முடிவை பின்னர் அறிவிப்பதாக சபாநாயகர் கூறினார்.
    Next Story
    ×