search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம்: டி.டி.வி தினகரனுக்கு 5 நாள் போலீஸ் காவல் விதித்தது டெல்லி நீதிமன்றம்
    X

    தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம்: டி.டி.வி தினகரனுக்கு 5 நாள் போலீஸ் காவல் விதித்தது டெல்லி நீதிமன்றம்

    முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக நேற்றிரவு கைதான டி.டி.வி தினகரன் இன்று பிற்பகல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.
    புதுடெல்லி:

    அ.தி.மு.க. இரண்டாக உடைந்ததால், அந்த கட்சியின் சின்னமான “இரட்டை இலை” சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் முடக்கி வைத்துள்ளது. இரட்டை இலை சின்னத்தை யாருக்கு கொடுக்கலாம் என்று தேர்தல் கமி‌ஷன் ஆய்வு செய்து வருகிறது. இதற்காக இரு அணியினரும் ஆவணங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் பெற அ.தி.மு.க. அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலம் அவர் லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதற்காக சுகேசுக்கு ரூ.10 கோடியை தினகரன் கொடுத்ததாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில் ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றது தொடர்பாக டி.டி.வி.தினகரன் மீது 3 பிரிவுகளில் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது குறித்த விசாரணைக்கு வருமாறு டெல்லி போலீசார் அளித்த சம்மனை ஏற்று டி.டி.வி. தினகரன் கடந்த சனிக்கிழமை டெல்லி சென்றார். சாணக்கியாபுரியில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் போலீஸ் முன்பு அவர் ஆஜரானார். அவரிடம் 4 நாட்களாக டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.



    இந்நிலையில், நேற்று நள்ளிரவு டெல்லி குற்றவியல் போலீசார் டிடிவி தினகரனை அதிரடியாக கைது செய்தனர். கைதான டி.டி.வி தினகரன் மற்றும் அவருடன் கைதான மல்லிகார்ஜுனா ஆகியோர் இன்று பிற்பகல் 3 மணி அளவில் டெல்லி திஸ் ஹசாரி கோர்ட்டில் நீதிபதி பூணம் சவுத்திரி முன்னர் ஆஜர்படுத்தப்பட்டார்.

    அப்போது, தினகரன் வக்கீலின் சார்பில் அவரை ஜாமீனில் விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேற்படி வழக்கு தொடர்பாக சென்னை, கொச்சி, பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு அழைத்துச் சென்று இருவரையும் விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே, அவர்களை 7 நாள் போலீஸ் காவலில் ஒப்படைக்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்வாதம் செய்தார்.

    இதையடுத்து தினகரனை 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.
    Next Story
    ×