search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.ஐ.டி. டெல்லி உள்ளிட்ட 4 முக்கிய கல்வி நிறுவனங்களின் இணையதளங்கள் முடக்கம்
    X

    ஐ.ஐ.டி. டெல்லி உள்ளிட்ட 4 முக்கிய கல்வி நிறுவனங்களின் இணையதளங்கள் முடக்கம்

    டெல்லி ஐ.ஐ.டி, அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம் உள்ளிட்ட நான்கு முக்கிய கல்வி நிறுவனங்களின் இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
    புதுடெல்லி:

    டெல்லி பல்கலைக் கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம், ஐ.ஐ.டி. டெல்லி, ஐ.ஐ.டி புவனேஸ்வர் ஆகிய நான்கு கல்வி நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற வாசகம் 4 கல்வி நிறுவனங்களின் இணையதளங்களிலும் வெளியாகி இருக்கிறது.  

    இது குறித்து பாகிஸ்தான் ஆதரவு ஹேக்கர் கூறுகையில், “எதுவும் அழிக்கப்படவில்லை, திருடவில்லை. இந்தியர்களுக்கு என்னுடைய செய்தியை வழங்க இங்கு தான் இருக்கிறேன்” என்றார்.

    மதியம் 3.30 மணியளவில் இணையதளங்கள் முடக்கம் செய்யப்பட்டது தெரியவந்தது. ஹேக்கிங் செய்தவர்கள் பாக்கிஸ்தான் ஹக்ஸ்சர்ஸ் க்ரூ என்று அறியப்படுகிறார்கள்.

    முடக்கப்பட்ட இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ள செய்திகள் பின்வருமாறு:-

    ”இந்திய அரசுக்கும், இந்திய மக்களுக்கும் எனது வாழ்த்துக்கள். உங்களுடைய ஹீரோக்கள்(ராணுவ வீரர்கள்) காஷ்மீரில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? அவர்கள் அப்பாவி காஷ்மீர் மக்களை கொன்று கொண்டிருக்கிறார்கள்’

    ”அவர்கள் பல பெண்களை கற்பழித்து இருக்கிறார்கள் தெரியுமா? காஷ்மீரில் இன்னும் பல பெண்களை கற்பழித்துக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா? உங்களுடைய சகோதரர்கள், சகோதரிகள், தந்தைகள் மற்றும் தாய்மார்கள் கொலை செய்யப்பட்டால் நீங்கள் எப்படி உணர்வீர்கள்? உங்களுடைய தாய்மார்கள் மற்றும் சகோதரிகளை யாரேனும் ஒருவர் கற்பழித்தால் நீங்கள் எப்படி உணர்வீர்கள்? உங்களது வாழ்க்கை மற்றும் உங்களுடைய குடும்பங்கள் அழிக்கப்பட்டிருந்தால்?”

    இவ்வாறு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

    இரவு 8.45 மணியளவில் டெல்லி பல்கலைக் கழகம், அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகம் மற்றும் ஐ.ஐ.டி புவனேஸ்வர் ஆகியவற்றின் இணையதளங்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது. ஆனால் ஐ.ஐ.டி. டெல்லியின் இணையதளம் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

    பாகிஸ்தானின் ரெயில்வே இணையங்களை இந்திய ஹேக்கர்கள் முடக்கம் செய்ததற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த முடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×