search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நக்சலைட்டுகள் தாக்குதல் கோழைத்தனமான செயல்: ராஜ்நாத்சிங்
    X

    நக்சலைட்டுகள் தாக்குதல் கோழைத்தனமான செயல்: ராஜ்நாத்சிங்

    சத்தீஷ்கரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதல் கோழைத்தனமான செயல், பலியான வீரர்களின் தியாகம் ஒருபோதும வீண் போகாது என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

    ராய்ப்பூர்:

    சத்தீஷ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் நக்சலைட்டுகள் அதிகம் உள்ள பகுதியாகும்.

    இதனால் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சி.ஆர். பி.எப்.) அங்கு முகாமிட்டு நக்சலைட்டுகளை ஒடுக்கி வருகின்றனர்.

    சுக்மா மாவட்டத்தில் உள்ள காலாபத்தர் பகுதியில் புதிதாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு சாலை அமைத்து வரும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 74-வது படை பிரிவை சேர்ந்த 99 பேர் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது நக்சலைட்டுகள் நடத்திய அதிரடி தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 25 பேர் பலியானார்கள். இதில் 4 பேர் தமிழர்கள்.

    நக்சலைட்டுகள் நடத்திய இந்த தாக்குதல் சம்பவம் மிகவும் கொடூரமானது. இதனால் நாடே மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளது.

    300 நக்சலைட்டுகள் ஒரே நேரத்தில் சுற்றி வளைத்து இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. பெண் நக்சலைட்டுகளும் இதில் இருந்துள்ளனர். அவர்கள் அனைவருமே கருப்பு சீருடையில் இருந்து உள்ளனர்.

    ராக்கெட் லாஞ்சர் அதிநவீன துப்பாக்கிகள், குண்டுகள் மூலம் நக்சலைட்டு கள் தாக்குதல் நடத்தியதும் தெரிய வந்துள்ளது. காயம் அடைந்த சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் இதுபற்றி கூறியதாவது:-


    மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் முகாமில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில்தான் சாலை அமைக்கும் பணி நடந்து வந்தது. 300 நக்சலைட்டுகள் ஒரே நேரத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அவர்கள் ராக்கெட் லாஞ்சர், தானியங்கி ஆயுதங்கள், ஏ.கே.47 ரக துப்பாக்கி ஆகியவற்றை பயன்படுத்தினார்கள். நாங்களும் கணிசமான நக்சலைட்டுகளை கொன்றோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நக்சலைட்டுகள் நடத்திய இந்த மோசமான தாக்குதல் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திரமோடி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். நக்சலைட்டுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

    மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் இன்று சத்தீஷ்கர் மாநிலம் சென்றார். நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்திய இடத்தை சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

    தாக்குதலில் பலியான சி.ஆர்.பி.எப். வீரர்களின் உடலுக்கு அவர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர் ராஜ்நாத்சிங் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நக்சலைட்டுகள் ரத்த வெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். விரக்தியின் அடையாளத்தை இது காட்டுகிறது. அவர்களது சவாலை அரசு ஏற்றுக் கொண்டது. நக்சலைட்டுகளுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கை குறித்து மறு ஆய்வு செய்யப்படும். இது ஒரு கோழைத்தனமான செயல் ஆகும். வீரர்களின் தியாகம் ஒருபோதும் வீண் போகாது.

    பழங்குடியினரை நக்சலைட்டுகள் கேடயமாக பயன்படுத்தி வருகின்றனர். நக்சலைட்டுகளை ஒடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×