search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரள மந்திரி மணியை கண்டித்து இடுக்கியில் முழுஅடைப்பு - பெண்கள் சாலைமறியல்
    X

    கேரள மந்திரி மணியை கண்டித்து இடுக்கியில் முழுஅடைப்பு - பெண்கள் சாலைமறியல்

    கேரள மந்திரி மணியின் ஆபாச பேச்சை கண்டித்து இடுக்கி மாவட்டத்தில் இன்று பா.ஜனதா கட்சி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். சமீபத்தில் நடந்த ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது அரசு இடத்தில் இருந்த 15 அடி உயர சிலுவையை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினார்கள். இது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அதிகாரிகளின் இந்த செயலுக்கு ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மின்சார துறை மந்திரியுமான எம்.எம்.மணி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் இடுக்கி மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மந்திரி மணி மூணாறு பகுதியில் செயல்படும் தோட்ட தொழிலாளர்கள் சங்கம் பற்றி சர்ச்சை கருத்துக்களை தெரிவித்தார். இந்த சங்கத்தில் ஏராளமான தமிழ் பெண்களும் உறுப்பினர்களாக உள்ளனர். மணியின் கருத்துக்கள் தோட்டத் தொழிலாளர்களிடம் கடும் எதிர்ப்பை கிளப்பி உள்ளது.

    தோட்டத் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் குடியும், கும்மாளமுமாக இருப்பதாகவும், பெண் தோட்டத் தொழிலாளர்களும் மது அருந்திவிட்டு சட்டத்துக்கு எதிராக ஆபாசமாக நடந்து கொள்வதாகவும் மந்திரி மணி பேசியதாக அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.

    மந்திரி மணியின் பேச்சை கண்டித்து தோட்டத் தொழிலாளர் சங்க மகளிரணி தலைவி கோமதி தலைமையில் பெண்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பழைய மூணாறு சாலையில் படுத்து பெண்கள் நடத்திய போராட்டம் காரணமாக அங்கு 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த தகவல் கிடைத்ததும் உயர் போலீஸ் அதிகாரிகள் அங்கு சென்று பெண்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

    போலீசார் இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    இதற்கிடையில் மந்திரி மணியின் ஆபாச பேச்சை கண்டித்து இடுக்கி மாவட்டத்தில் இன்று பா.ஜனதா கட்சி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. அங்கு பல இடங்களில் இன்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க அங்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மந்திரி மணியின் சர்ச்சை பேச்சு பற்றி கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் கூறுகையில் பெண்களையும் பொது வாழ்வில் ஈடுபட்டு உள்ளவர்களையும் தவறாக யார் பேசினாலும் அது தவறு தான். மணி தான் கூறிய கருத்துக்களை வாபஸ் வாங்க வேண்டும் என்றார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் அச்சுதானந்தன் கூறும்போது தொழிலாளர்களுக்கும், பெண்களுக்கும் எதிராக பேசிய மணி மன்னிப்பு கேட்க வேண்டும். அவரது பேச்சு அவர் மந்திரி பதவி வகிக்க தகுதியானவர் அல்ல என்பதைதான் காட்டுகிறது என்றார்.

    எதிர்கட்சி தலைவர் ரமேஷ்சென்னிதலா இது பற்றி கருத்து தெரிவிக்கும் போது கேரள அமைச்சர் அவையில் அங்கம் வகிக்கும் மணி பேசிய உள்ள பேச்சு மிகவும் கீழ்த்தரமாக உள்ளது. அவருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம் நடத்தும் என்றார்.

    பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் கும்மனம் ராஜசேகரன் கூறும்போது மணியின் பேச்சு தான்தோன்றிதனமாக உள்ளது. இது பெரிய தவறு. இது போல பேசுவது யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
    Next Story
    ×