search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கு: முதல்-மந்திரி வீரபத்ரசிங் அமலாக்கத்துறை முன்பு ஆஜர்
    X

    சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கு: முதல்-மந்திரி வீரபத்ரசிங் அமலாக்கத்துறை முன்பு ஆஜர்

    சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக இமாச்சல பிரதேச மாநில முதல்- மந்திரி வீரபத்ரசிங் அமலாக்கத்துறை முன்பு இன்று ஆஜரானார்.
    புதுடெல்லி:

    இமாச்சல பிரதேச முதல்- மந்திரி வீரபத்ரசிங் (வயது 83). மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியின் போது இவர் மத்திய மந்திரியாக பதவி வகித்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.10 கோடி அளவு சொத்து சேர்த்ததாக வீரபத்ரசிங், அவரது மனைவி மற்றும் சிலர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

    சட்டவிரோத பண பரிவர்த்தனை அடிப்படையில் அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இது தொடர்பாக டெல்லியில் உள்ள வீரபத்ர சிங்குக்கு சொந்தமான ரூ.14 கோடி மதிப்பிலான பண்ணை வீட்டை அமலாக்கத்துறை ஏற்கனவே முடக்கி இருந்தது.

    இந்த வழக்கு தொடர்பாக வீரபத்ரசிங் மனைவி பிரதீபா, மகன் விக்ரமாதித்தியா ஆகியோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தி இருந்தனர்.

    வீரபத்ரசிங்கிடம் விசாரணை நடத்த முடிவு செய்து அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் கடந்த 13-ந்தேதி அவர் ஆஜராகவில்லை. இதை தொடர்ந்து 20-ந்தேதி (இன்று) கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று மீண்டும் சம்மன் அனுப்பி இருந்தது.

    அதன்படி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை முன்பு இமாச்சலபிரதேச முதல்-மந்திரி வீரபத்ரசிங், இன்று அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக வாக்குமூலம் பெற்றனர்.

    சோதனையின் போது அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும் வீரபத்ரசிங்கிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்தனர்.
    Next Story
    ×