search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எய்ட்ஸ் நோயாளிகளிடம் பாரபட்சம் காட்டினால் சிறை - பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது
    X

    எய்ட்ஸ் நோயாளிகளிடம் பாரபட்சம் காட்டினால் சிறை - பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது

    எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளின் உரிமைகளை பாதுகாக்கிற விதத்தில் மத்திய பா.ஜனதா கூட்டணி அரசு தயாரித்த ‘எச்.ஐ.வி. (தடுப்பு, கட்டுப்பாடு) மசோதா-2017’ என்ற மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியது.
    புதுடெல்லி:

    எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளின் உரிமைகளை பாதுகாக்கிற விதத்தில் மத்திய பா.ஜனதா கூட்டணி அரசு ‘எச்.ஐ.வி. (தடுப்பு, கட்டுப்பாடு) மசோதா-2017’ என்ற பெயரில் ஒரு மசோதாவை தயாரித்தது.

    இந்த மசோதாவுக்கு மேல்சபை கடந்த மாதம் 21-ந் தேதி ஒப்புதல் அளித்தது.



    இந்த மசோதா பாராளுமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டது. அதன்மீது நேற்று விவாதம் நடத்தப்பட்டது. பல உறுப்பினர்கள் பங்கேற்று ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் தெரிவித்தனர்.

    விவாதத்தின் முடிவில் சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி. நட்டா பதில் அளித்து பேசினார். அப்போது அவர், “இது வரலாற்றுச்சிறப்பு மிக்க நாள். இந்த மசோதா நிறைவேறி இருப்பது, எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்துவதற்காக இந்த நாடு மேற்கொண்ட பயணத்தை நிறைவு செய்திருக்கிறது” என குறிப்பிட்டார். மேலும், “எய்ட்ஸ் நோயாளிகள் மீது பாரபட்சம் காட்டக்கூடாது என்பது முன்பும் பின்பற்றப்பட்டது. ஆனால் அது வழிகாட்டும் நெறிமுறையாக இருந்தது. இப்போது சட்டமாகி உள்ளது” எனவும் அவர் குறிப்பிட்டார்.

    அதைத் தொடர்ந்து குரல் ஓட்டின் மூலம் மசோதா நிறைவேறியது. ஜனாதிபதி பிராணப் முகர்ஜி தனது ஒப்புதலை அளித்தவுடன் இது சட்டமாகி அமலுக்கு வரும்.

    இந்த சட்டத்தின்படி எச்.ஐ.வி., மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளிடம், யாரேனும் பாரபட்சமாக நடந்து கொண்டால் அவர்களுக்கு 3 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×