search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வன்முறையால் வாக்குப்பதிவு மந்தம்: ஸ்ரீநகரில் 2 மணி வரை வெறும் 5.52 சதவீத வாக்குகள் பதிவு
    X

    வன்முறையால் வாக்குப்பதிவு மந்தம்: ஸ்ரீநகரில் 2 மணி வரை வெறும் 5.52 சதவீத வாக்குகள் பதிவு

    ஸ்ரீநகர் பாராளுமன்றத் தொகுதியில் இன்று காலை முதலே வாக்குச்சாவடிகளுக்கு அருகில் வன்முறை நீடிப்பதால் வாக்குப்பதிவு மிகவும் மந்தமாக உள்ளது. மதியம் வரை வெறும் 5.52 சதவீத வாக்குகளே பதிவாகியிருந்தன.
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டுக் கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா போட்டியிடுகிறார். இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து பல்வேறு பகுதிகளில் போராட்டக்காரர்கள் தேர்தலில் வாக்களிக்க வருவோரை தடுத்ததால் பிரச்சனை ஏற்பட்டது.

    போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. குறிப்பாக நகர்ப்பகுதியில் தேர்தலை நடத்த விடாமல் வன்முறையாளர்கள் கல்வீச்சு தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். வன்முறையாளர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தத் தொடங்கினர்.

    இந்த துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். தொடர் வன்முறையால் தொகுதியில் ஓட்டுப்பதிவு மிகவும் மந்தமாக இருந்தது. முதல் 2 மணி நேரத்தில் 1 சதவீதம் வாக்குகளே பதிவாகி இருந்தது. 2 மணி நிலவரப்படி சற்று அதிகரித்து 5.52 சதவீத வாக்குகள் பதிவானது. ஒரு சில வாக்குச்சாவடிகளில் மதியம் வரை ஒரு வாக்குகூட பதிவாகாத நிலை இருந்தது.

    வாக்குச்சாவடிகள் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக, பொதுமக்கள் வாக்களிக்க வருவதை தவிர்த்தனர்.

    பிற்பகல் நிலவரம் மிகவும் மோசமடைந்தது. கல்வீச்சு மற்றும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள ஒரு பூத் மீது பெட்ரோல் குண்டு வீசியதால் அந்த பூத் தீப்பிடித்து எரிந்தது. காவல் நிலையம் மீதும் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த ராணுவம் வரவழைக்கப்பட்டது.


    தேர்தலை சுமுகமாக நடத்துவதற்கு மெகபூபா முப்தி தலைமையிலான அரசாங்கம் முற்றிலும் தவறிவிட்டதாக பரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    Next Story
    ×