search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாரிகள் ஸ்டிரைக் வாபஸ்: ஐதராபாத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு
    X

    லாரிகள் ஸ்டிரைக் வாபஸ்: ஐதராபாத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு

    மத்திய அரசுடன் இன்று நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, 10 நாட்களாக நீடித்த லாரிகள் ஸ்டிரைக் திரும்பப் பெறப்பட்டது.
    புதுடெல்லி:

    வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் பிரிமியம் உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் கடந்த 30-ந் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றுவந்தது.

    லாரிகள் இயக்கப்படாததால் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, பாண்டிச்சேரி ஆகிய 6 மாநிலங்களிலும் 30 லட்சத்திற்கும் அதிகமான லாரிகள் ஓடவில்லை.

    இதனால் 6 மாநிலங்களிலும் நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் கோடிக்கும் அதிகமான காய்கறி உள்பட அத்தியாவசிய பொருட்கள் பரிமாற்றம் முற்றிலும் முடங்கி உள்ளது. விலை வாசி உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். 1 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

    மத்திய காப்பீட்டு துறை சார்பில் ஏற்கனவே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தென் இந்திய லாரி உரிமையாளர்களின் கோரிக்கைக்கு ஆதரவாக நாடு தழுவிய லாரி ஸ்டிரைக்கிற்கு இந்திய லாரி உரிமையாளர் சங்கம் அழைப்பு விடுத்திருந்தது.

    இந்நிலையில், நேற்று டெல்லியில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியுடன் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதேபோல, ஐதராபாத்தில் இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகளுடன் தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் கோபால்நாயுடு, பொதுச்செயலாளர் சண்முகப்பா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தைகளில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இதனால், லாரி ஸ்டிரைக் தொடரும் என அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, இன்று ஐதராபாத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மத்திய அரசுடன் நடத்தப்பட்ட இந்த பேச்சுவார்த்தையில் சுமுகமான உடன்பாடு ஏற்பட்டது. இதையடுதது, வேலை நிறுத்தப் போராட்டத்தை திரும்ப பெறுவதாக தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் சண்முகப்பா தெரிவித்தார். இதன்மூலம், கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்த ஸ்டிரைக் முடிவுக்கு வந்துள்ளது.
    Next Story
    ×