search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவர்கள் தாக்குதல் தொடர்பாக ஆப்ரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை துரதிர்ஷ்டவசமானது: சுஷ்மா சுவராஜ் வேதனை
    X

    மாணவர்கள் தாக்குதல் தொடர்பாக ஆப்ரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை துரதிர்ஷ்டவசமானது: சுஷ்மா சுவராஜ் வேதனை

    ஆப்ரிக்க மாணவர்கள் தாக்குதல் தொடர்பாக அந்நாட்டு தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை துரதிர்ஷ்டவசமானது என, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்திருக்கிறார்.
    புது டெல்லி:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் 12-ம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவர் ஒருவர் அதிக அளவு போதைப் பொருள் பயன்படுத்தியதின் காரணமாக, சமீபத்தில் இதய அடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். மாணவனின் மரணத்திற்கு அப்பகுதியில் வசித்து வரும் நைஜீரியர்கள் காரணமாக இருக்கலாம் எனக் கருதிய மாணவனின் உறவினர்கள் நைஜீரியர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர்.

    சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், உள்ளூர்வாசிகளின் தாக்குதலில் காயமடைந்த நைஜீரிய நாட்டவர்களை அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதைத் தொடர்ந்து அன்சால் மால் என்ற வணிக வளாகம் அருகே நைஜீரியர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், சில பேரை தேடி வருகின்றனர். இதுகுறித்து ஆப்ரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தாக்குதலை இனவெறி தாக்குதல் என தெரிவித்து, இதற்காக சர்வதேச விசாரணை வேண்டும் என தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில், ஆப்ரிக்க மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து அந்நாட்டு தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை வலியைத் தருகிறது என சுஷ்மா சுவராஜ் தெரிவித்திருக்கிறார்.

    ஆப்ரிக்கர்கள் மீதான தாக்குதல் குறித்து காங்கிரஸ் கட்சி இன்று மக்களவையில் கேள்வி எழுப்பியது. இந்த விவகாரம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் கேட்டுக்கொண்டது.



    இதற்கு வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில் “இந்தியாவில் ஆப்ரிக்க மாணவர்கள் தாக்குதல் தொடர்பாக அந்நாட்டு தூதரகம் அளித்துள்ள அறிக்கை துரதிர்ஷ்டவசமானது மற்றும் வலி மிகுந்தது. இந்தியாவில் ஆப்ரிக்க மாணவர்களுக்கு நாங்கள் உரிய பாதுகாப்பு அளித்து வருகிறோம். விசாரணை முடிவதற்கு முன்பாகவே இனவெறி தாக்குதல் என அழைக்கக்கூடாது.

    விசாரணை முடிவதற்கு முன்பாக இந்த சம்பவத்தினை இனவெறி என அழைக்காதீர்கள். அமெரிக்காவில் இந்தியர்கள் மீதாக தாக்குதல் நிகழ்ந்தபோது இந்தியா அதனை உடனடியாக இனவெறி தாக்குதல் என கூறிவிடவில்லை.

    இது தொடர்பாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் பேசியிருக்கிறேன். பதிலுக்கு அவர் இந்த வழக்கில் பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆப்ரிக்க நாட்டு தூதரக அதிகாரிகளிடம் தொடர்பிலேயே உள்ளனர். நிலவரம் என்னவென்பதை பிரதமரும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார். இந்த வழக்கில் விரிவான விசாரணை அறிக்கை முதலில் வரட்டும்” என்றார்.
    Next Story
    ×