search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடும் உத்தரவுக்கு எதிரான மனுக்கள் மீது இன்று விசாரணை
    X

    நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடும் உத்தரவுக்கு எதிரான மனுக்கள் மீது இன்று விசாரணை

    தேசிய, மாநில நெடுஞ் சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடும் உத்தரவுக்கு எதிரான மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடக்கிறது.
    புதுடெல்லி:

    தேசிய, மாநில நெடுஞ் சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடும் உத்தரவுக்கு எதிரான மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடக்கிறது.

    இந்தியாவில் விபத்துகளில் ஏராளமானோர் உயிர் இழப்பதற்கு தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் தான் காரணம் என்று கூறி சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அத்தகைய மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது. தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் அவற்றுக்கு 500 மீட்டர் தூரத்திற்குள் உள்ள மதுக்கடைகள் அனைத்தையும் மார்ச் 31-ந் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) மூடவேண்டும்.

    ஏப்ரல் மாதம் 1-ந்தேதியில் இருந்து அத்தகைய மதுக்கடைகளின் அனுமதி தாமாகவே காலாவதியாகிவிடும் என்றும் உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த உத்தரவில் திருத்தம் செய்யக்கோரி மது விற்பனையாளர்கள் சங்கம், பல மதுபான ஆலைகள் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தன.

    தமிழக அரசு சார்பில் கடந்த 23-ந் தேதி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நெடுஞ் சாலைகளில் உள்ள மதுக்கடைகளை வேறு இடங்களில் மாற்றி அமைக்க அவைகளின் அனுமதி காலம் வரை, அதாவது நவம்பர் மாதம் 28-ந் தேதி வரை காலநீட்டிப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

    கேரளா, பஞ்சாப் மற்றும் தெலுங்கானா மாநிலங்களும் நேற்று சுப்ரீம் கோர்ட்டை அணுகி இந்த உத்தரவில் மாற்றம் செய்யக்கோரி மனுக்கள் தாக்கல் செய்தன.

    இதைத்தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று அட்டார்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி மற்றும் பல வக்கீல்கள் ஆஜராகி, நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடை களை மூடும் உத்தரவு 31-ந் தேதி அமலுக்கு வருகிறது. எனவே இந்த வழக்கு மிகவும் முக்கியமானதாகிறது. இந்த மனுக்கள் மீது விரைவாக விசா ரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜே.எஸ்.கேஹர், இன்று (புதன்கிழமை) இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். ஒருவேளை நீதிபதி சந்திரசூட் இன்று வரவில்லை என்றால், வேறு ஒரு அமர்வு அமைத்து கொடுப்பதாகவும் அவர்களிடம் நீதிபதி கூறினார்.

    Next Story
    ×