search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆம் ஆத்மி, மா.கம்யூனிஸ்டு ஆதரவு
    X

    டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆம் ஆத்மி, மா.கம்யூனிஸ்டு ஆதரவு

    டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், வறட்சி நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் கடந்த 14–ந் தேதி முதல் போராட்டம் நடந்து வருகிறது.

    விவசாயிகள் தங்களது கழுத்தில் தூக்கு கயிற்றை மாட்டியபடியும், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சங்கு ஊதி தொடர்ந்து போராட்டம் நடத்துகின்றனர்.

    அவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. நடிகர்கள் விஷால், பிரகாஷ்ராஜ் ஆகியோர் மத்திய மந்திரி அருண் ஜெட்லியை சந்தித்து விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக மனு அளித்தனர். இதேபோல் வைகோவும் மனு அளித்துள்ளார். போராடும் விவசாயிகளை மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் சந்தித்து, விவசாய மந்திரியிடம் அழைத்துச் சென்று பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிப்பதாக கூறியதையடுத்து தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்றனர். ஆனால், மத்திய அரசிடம் இருந்து எந்த உத்தரவாதமும் வராதால் தொடர்ந்து ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், இன்றைய போராட்டத்தில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஆதரவு அளித்தனர். இதேபோல் டெல்லி மாநில ஆளும் கட்சியான ஆம் ஆத்மியும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. டெல்லி மாநில எம்.எல்.ஏ. சோம்நாத் பார்தி நாளை விவசாயிகளை சந்தித்து பேச உள்ளார்.

    முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகிய இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, மத்தியகுழு உறுப்பினர் டி.கே. ரெங்கராஜன்  விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். மேலும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அமைச்சர்களிடமும் நாடாளுமன்றத்திலும் வலியுறுத்தப்படும் என தெரிவித்தனர்.
    Next Story
    ×