search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எலி தொல்லை தாங்காமல் வீடு மாறும் முலாயம்சிங்
    X

    எலி தொல்லை தாங்காமல் வீடு மாறும் முலாயம்சிங்

    எலி தொல்லையால் எனக்கு வேறு வீடு தாருங்கள் என்று அரசிடம் முலாயம்சிங் கேட்டாலும் வீடு மாறுவதற்கு வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகின்றன.
    லக்னோ:

    சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ் உத்தரப்பிரதேச மாநில தலைநகரம் லக்னோவில் விக்ரமாதித்யா மார்க் என்ற இடத்தில் வசித்து வருகிறார்.

    இந்த வீடு அரசால் ஒதுக்கப்பட்டதாகும். முன்னாள் முதல்-மந்திரி என்ற பெயரில் முலாயம்சிங்குக்கு இந்த வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக இந்த வீட்டில் தான் அவர் வசித்து வந்தார். இங்கு இருந்தபடிதான் அரசியல் பணிகளையும் கவனித்து வந்தார்.

    இப்போது அவர் வீடு மாற திட்டமிட்டுள்ளார். எனவே, மாநில அரசு நகர மேம்பாட்டு துறைக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், இந்த வீடு எனக்கு பொருத்தமாக இல்லை. இங்கு எலி தொல்லை அதிகமாக உள்ளது. எனவே எனக்கு வேறு வீடு ஒதுக்கி தாருங்கள் என்று கூறி உள்ளார்.

    எலி தொல்லையால் எனக்கு வேறு வீடு தாருங்கள் என்று அவர் அரசிடம் கேட்டாலும் அவர் வீடு மாறுவதற்கு வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகின்றன.


    சமீப காலமாக அவருக்கு அரசியலில் இறங்கு முகமாக உள்ளது. முலாயம்சிங்குக்கும், அவரது மகன் அகிலேஷ் யாதவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கட்சி முழுமையாக அகிலேஷ் யாதவின் கைக்கு சென்று விட்டது. மேலும் உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலிலும் சமாஜ்வாடி கட்சி படு தோல்வி அடைந்து பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

    இதற்கெல்லாம் தனது வீட்டின் மோசமான ராசிதான் காரணம் என முலாயம்சிங் கருதுகிறார். எனவே, வேறு வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று அவர் விரும்புகிறார். இதற்காகத்தான் வேறு வீடு கேட்டு விண்ணப்பித்து இருப்பதாக தெரிகிறது.
    Next Story
    ×