search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளியில் பா.ஜ.க. கொடியேற்றி வெற்றியை கொண்டாடிய தொண்டர்கள்: விசாரணைக்கு உத்தரவு
    X

    பள்ளியில் பா.ஜ.க. கொடியேற்றி வெற்றியை கொண்டாடிய தொண்டர்கள்: விசாரணைக்கு உத்தரவு

    பா.ஜ.க. தொண்டர்கள் சிலர் பள்ளி வளாகத்தில் புகுந்து பா.ஜ.க. கொடியை ஏற்றி தேர்தல் வெற்றியை கொண்டாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
    அராரியா:

    உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநில தேர்தல்களில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட மார்ச் 11-ம் தேதி, பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாகமாக வெற்றியை கொண்டாடினர்.

    இந்நிலையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. தொண்டர்கள் சிலர், கடந்த 18-ம் தேதி பள்ளி வளாகத்திற்குள் புகுந்து பா.ஜ.க. கொடியை ஏற்றி உ.பி. தேர்தல் வெற்றியை கொண்டாடி உள்ளனர். அராரியா மாவட்டம் போர்பஸ்கஞ்ச் பகுதியில் உள்ள அந்த பள்ளியின் வகுப்புநேரம் முடிந்து மாணவர்கள் வெளியேறிய பின்னர், பா.ஜ.க.வினர் உள்ளே புகுந்து கட்சி கொடியை ஏற்றியதாக மாவட்ட கல்வி அதிகாரியிடம் தலைமை ஆசிரியர் புகார் தெரிவித்துள்ளார்.

    பா.ஜ.க.வினரின் செயல்பாடு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுபற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை ஆசிரியர் கூறியுள்ளார்.

    இதற்கிடையே நடந்த சம்பவத்திற்கு பா.ஜ.க. மாவட்டத் தலைவர் பப்பன் சிங் வருத்தம் தெரிவித்துள்ளார். உற்சாக மிகுதியில் தங்கள் தொண்டர்கள் சிலர் இவ்வாறு நடந்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×