search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கைக்கு அவகாசம் வழங்கும் தீர்மானத்தை இந்தியா எதிர்க்க வேண்டும்: அ.தி.மு.க. எம்.பி. வலியுறுத்தல்
    X

    இலங்கைக்கு அவகாசம் வழங்கும் தீர்மானத்தை இந்தியா எதிர்க்க வேண்டும்: அ.தி.மு.க. எம்.பி. வலியுறுத்தல்

    போர்க்குற்ற விசாரணை தொடர்பாக இலங்கைக்கு அவகாசம் வழங்குவதற்கான தீர்மானத்தை இந்தியா எதிர்க்க வேண்டும் என பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி. வலியுறுத்தினார்.
    புதுடெல்லி:

    இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் விசாரணை நடத்தி அறிக்கை அளிப்பதற்கு இலங்கை அரசாங்கம் 2 ஆண்டு அவகாசம் கேட்டுள்ளது. இதற்கு அனுமதி அளிக்கும் வகையில், ஜெனீவாவில் வரும் 22-ம் தேதி (நாளை மறுநாள்) நடைபெற உள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. இலங்கைக்கு ஆதரவான இந்த தீர்மானத்தை இந்தியா எதிர்க்க வேண்டும் என தமிழக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், இந்திய பாராளுமன்றத்தில் இப்பிரச்சினை எதிரொலித்தது. மாநிலங்களவையில் ஜீரோ அவரில் இப்பிரச்சினையை அ.தி.மு.க. எம்.பி. மைத்ரேயன் எழுப்பினார்.



    அவர் பேசும்போது, ‘இலங்கையில் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலையில் 1.5 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், இதுவரை அங்கு நம்பகமான விசாரணை நடத்தப்படவில்லை. தவறு செய்த ஒரு நபர்கூட தண்டிக்கப்படவில்லை.

    இலங்கைக்கு மேலும் 2 ஆண்டு அவகாசம் அளிக்கும் தீர்மானம் மீது மார்ச் 22-ம் தேதி ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சில நாடுகள் கொண்டு வந்துள்ள இந்த தீர்மானம் தமிழர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

    நாட்டின் மிகவும் சக்திவாயந்த தலைவராக பிரதமர் மோடி விளங்குகிறார். உண்மையில், அவர் உலகின் மிகவும் சக்திவாய்ந்த தலைவரும் ஆவார். மோடியால்கூட தமிழர்களுக்கு நீதி வழங்க முடியாது என்றால், வேறு யாராலும் வழங்க முடியாது. எனவே, மார்ச் 22-ம் தேதி ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
    Next Story
    ×