search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாரதா உளவு வீடியோ விவகாரம்: பாராளுமன்றத்தில் திரிணாமுல் - கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள் கடும் மோதல்
    X

    நாரதா உளவு வீடியோ விவகாரம்: பாராளுமன்றத்தில் திரிணாமுல் - கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள் கடும் மோதல்

    மேற்கு வங்காளம் சட்டசபை தேர்தலின்போது ஆளும் திரிணாமுல் கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பிரபல தொழிலதிபர்களிடம் பணம் வாங்கியது தொடர்பாக வெளியான வீடியோவை மையப்படுத்தி திரிணாமுல் - கம்யூனிஸ்ட் எம்.பி.க்களிடையே மக்களவையில் இன்று மோதல் வெடித்தது.
    புதுடெல்லி:

    மேற்கு வங்காளம் மாநில சட்டசபைக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது ஆளும் திரிணாமுல் கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பிரபல தொழிலதிபர்களிடம் பணம் வாங்கியதை மறைந்திருந்து வீடியோவாக பதிவுசெய்த ‘நாரதா’ செய்தி நிறுவனம் அந்த காட்சிகளை அப்போது வெளியிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இல்லாத ஒரு பெயரை சொல்லி நிதி அளிக்க வந்ததுபோல் நடித்தவர்களிடம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 மக்களவை எம்.பி.க்கள், 3 மந்திரிகள் மற்றும் கொல்கத்தா நகர மேயர் ஆகியோர் பணம் பெற்றுகொண்ட காட்சிகளை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது, எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட சதி என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி அப்போது குறிப்பிட்டிருந்தார். இவ்விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு இன்று கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    இது தொடர்பான உத்தரவை இன்று காலை பிறப்பித்த கொல்கத்தா ஐகோர்ட் தற்காலிக தலைமை நீதிபதி நிஷிடா மஹட்ரே, விரைவாக விசாரித்து இன்னும் 72 மணி நேரத்துக்குள் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நிபந்தனை விதித்துள்ளார்.

    இந்நிலையில், இந்த நாரதா ஊழல் விவகாரத்தை மையப்படுத்தி பாராளுமன்ற மக்களவையில் இன்று திரிணாமுல் காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.க்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது.



    மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் இடையே எழுந்து நின்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி., முஹம்மது சலீம், நாரதா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டிருந்ததை சுட்டிக்காட்டி பேசினார்.

    ஐகோர்ட்டின் இந்த உத்தரவானது, நாரதா ஊழல் விவகாரம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது,? என்பதை தெளிவாக விளக்குகின்றது. இந்நிலையில், ஊழல் கரை படிந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களை இந்த மக்களவையில் அமர அனுமதிக்க கூடாது என்று சபாநாயகரிடம் அவர் தெரிவித்தார்.

    அப்போது, அவையில் அமர்ந்திருந்த சுகாதா ராய் உள்ளிட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் முஹம்மது சலீமுக்கு எதிராக கோஷமிட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.க்களான சங்கர் பிரசாத தத்தா, ராஜேஷ், பிஜூ ஆகியோர் திரிணாமுல் எம்.பி.க்களை எதிர்த்து வார்த்தை மோதலில் ஈடுபட்டனர்.

    இதனால், மக்களவையில் இன்று சிறிது நேரம் கூச்சலும் பரபரப்பும் ஏற்பட்டது.

    Next Story
    ×