search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி உள்பட ஐந்து மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
    X

    உ.பி உள்பட ஐந்து மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

    உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
    லக்னோ :

    உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு பிப்ரவரி மாதம் 4-ந் தேதி தொடங்கி, கடந்த 8-ந் தேதி வரை தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. ஜூலை மாதம் மத்தியில் ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ள நிலையில் இந்த 5 மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    5 மாநிலங்களிலும் இன்று  காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. உத்தரபிரதேசத்தில் 78 மையங்களிலும், உத்தரகாண்டில் 15 மையங்களிலும், பஞ்சாப்பில் 54 மையங்களிலும், கோவாவில் 2 மையங்களிலும், மணிப்பூரில் 9 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களிலும் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ஓட்டு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    தற்போதைய நிலவரப்படி பஞ்சாபில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா கட்சியில் முன்னிலையில் உள்ளது.


    உத்தரபிரதேசத்தில் மட்டும் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்குள் மத்திய படையினரின் பாதுகாப்பும், மையங்களுக்கு வெளியே மாநில போலீசாரின் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்கு வெளியே 100 மீட்டர் பரப்பளவில் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.

    ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்குள் செல்போன்கள் கொண்டு செல்லவும் அனுமதி அளிக்கப்படவில்லை. தேர்தல் கமி‌ஷன் பார்வையாளர்கள், நுண்ணிய பார்வையாளர்கள் ஓட்டு எண்ணிக்கையை மேற்பார்வையிடுகின்றனர். ஓட்டு எண்ணிக்கை நடவடிக்கை முழுவதும் வீடியோ படம் எடுக்கவும் தேர்தல் கமி‌ஷன் அறிவுரையின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×