search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜாமீனுக்கு ஒரு வாரம், பெட்டி கேஸ்களுக்கு 6 மாதம்: நீதிமன்றங்களுக்கு காலக்கெடு விதித்தது சுப்ரீம் கோர்ட்
    X

    ஜாமீனுக்கு ஒரு வாரம், பெட்டி கேஸ்களுக்கு 6 மாதம்: நீதிமன்றங்களுக்கு காலக்கெடு விதித்தது சுப்ரீம் கோர்ட்

    நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை தாமதம் ஆவதை தடுக்கும் நோக்கில், ஜாமீன் வழங்க ஒரு வாரம், பெட்டி கேஸ்களுக்கு 6 மாதம் என உச்ச நீதிமன்றம் காலக்கெடுவை விதித்துள்ளது.
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்கள் முதல் தலைமை நீதிமன்றமான உச்ச நீதிமன்றம் வரையில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. பல ஆண்டுகளாகக்கூட குற்ற வழக்குகள் தீர்க்கப்படாமல் உள்ளன. மேலும் சில வழக்குகளில் விசாரணை ஆரம்பக்கட்ட நிலையிலேயே இருப்பதால், குற்றம்சாட்டப்பட்ட நபர்கள், குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் தொடர்ந்து சிறைவாசம் அனுபவிக்கின்றனர்.

    இவ்வாறு விசாரணை தாமதம் காரணமாக சிறையில் இருக்கும் உசைன் உள்ளிட்ட சிலர் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். அதில், தங்கள் மீதான வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்கும்படி கேட்டுக்கொண்டனர்.

    இவ்வழக்குகள் நீதிபதிகள் ஆதர்ஷ் குமார் கோயல், யு யு லலித் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

    வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்கும்படி உயர்நீதிமன்றங்கள் மற்றும் விசாரணை நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், எந்தெந்த வழக்குகளை எவ்வளவு நாட்களில் முடிக்க வேண்டும்? என்று காலக்கெடுவும் நிர்ணயித்துள்ளனர்.

    “உயர்நீதிமன்றங்கள் தங்களுக்கு உட்பட்ட நீதிமன்றங்கள் பொதுவாக ஜாமீன் வழங்குவது குறித்து ஒரு வாரத்தில் முடிவு செய்ய வேண்டும் என உத்தரவிடவேண்டும். பெட்டி கேஸ் எனப்படும் சிறு குற்ற வழக்குகளில், விசாரணைக் கைதிகள் சிறையில் இருக்கும்பட்சத்தில், வழக்குகளை 6 மாதத்திற்குள் முடிக்கும்படி மாஜிஸ்திரேட்டுகளிடம் கூறவேண்டும்.

    தீவிர குற்றங்களுக்கான வழக்குகளில், குற்றம்சாட்டப் பட்டவர்கள் சிறையில் இருந்தால், அந்த வழக்குகளை அமர்வு நீதிமன்றங்கள் இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும். ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வரும் அனைத்து வழக்குகளையும் ஆண்டு இறுதிக்குள் முடிக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். கீழ் நீதிமன்றங்களின் விசாரணையை உயர்நீதிமன்றங்கள் கண்காணிக்க வேண்டும்.

    விரைவாக விசாரித்து நீதி வழங்க மறுப்பது, நீதி நிர்வாகத்தின் மீது பொதுமக்கள் மீதான நம்பிக்கைக்கு அச்சுறுத்தலாகும். நிதி ஆதாரம் இல்லாத மனுவாக இருந்தாலும்கூட, விரைவாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற அடிப்படை உரிமையை மறுக்கக் கூடாது” என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

    பல்வேறு ஆலோசனைகள், அறிவுறுத்தல்களுடன் கூடிய 22 பக்கங்கள் கொண்ட இந்த தீர்ப்பின் நகல் அனைத்து நீதிமன்றங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×