search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு: பாராளுமன்றம் 9-ந்தேதி மீண்டும் கூடுகிறது
    X

    பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு: பாராளுமன்றம் 9-ந்தேதி மீண்டும் கூடுகிறது

    பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வுக்காக பாராளுமன்றம் 9-ந்தேதி மீண்டும் கூடுகிறது. அடுத்த மாதம் 12-ந்தேதி இந்த கூட்டம் முடியும்.
    புதுடெல்லி:

    பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வுக்காக பாராளுமன்றம் 9-ந்தேதி மீண்டும் கூடுகிறது. அடுத்த மாதம் 12-ந்தேதி இந்த கூட்டம் முடியும்.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனவரி 31-ந்தேதி கூடியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் அன்று நடைபெற்ற பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை ஆற்றினார். அதே நாளில் பொருளாதார ஆய்வு அறிக்கையும் தாக்கலானது. அடுத்த நாளான பிப்ரவரி 1-ந்தேதி பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்தார்.

    அதைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் 5 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 2 மசோதாக்கள் நிறைவேறின. மேல்-சபையில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டது. 9-ந்தேதி முதல் அமர்வு முடிவுற்றது. பாராளுமன்றத்தின் இரு சபைகளும் மார்ச் 9-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.

    இந்த நிலையில் பாராளுமன்றமும், மேல்-சபையும் 9-ந்தேதி மீண்டும் கூடுகின்றன.

    பாரதீய ஜனதா எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, கிரிட் சோமையா, சாக்‌ஷி மகாராஜ் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி உறுப்பினர்கள், காஷ்மீர் பிரச்சினையில் காங்கிரஸ் செய்த தவறுகள் உள்ளிட்ட பிரச்சினைகளை அடையாளம் காணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

    ஏற்கனவே நிஷிகாந்த் துபே ஒரு தனிநபர் மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில் காஷ்மீரின் கில்ஜித் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மக்களுக்காக பாராளுமன்றத்தில் 5 இடங்களும், மேல்-சபையில் ஒரு இடமும் ஒதுக்கப்படவேண்டும் என்று கோரி உள்ளார்.

    இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “நாம் நமது கடந்த கால தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டிய தருணம் இது. பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ள பகுதிக்கு காஷ்மீர் சட்டசபையில் 25 இடங்கள் காலியாக வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இதேபோன்று பாராளுமன்றத்திலும், மேல்-சபையிலும் வைக்கப்படவில்லை. எனவேதான் நான் தனிநபர் மசோதா கொண்டு வந்துள்ளேன். இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. இதில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது” என்று கூறினார்.

    இந்த மசோதா அரசியல் சாசனத்தில் பிரிவு 370-ஐ தொடர்ந்து, ‘370 ஏ’ என புதிதாக ஒரு பிரிவை சேர்ப்பதற்கானது.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆட்சி நடக்கிற கேரளாவில், ஆர்.எஸ்.எஸ்., பாரதீய ஜனதா தொண்டர்கள் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பது குறித்த பிரச்சினையை பாரதீய ஜனதாவினர் எழுப்புவர்.

    உள்துறை, ரெயில்வே, ராணுவம், நிலக்கரி, விவசாயம் ஆகிய துறைகளுக்கான மானிய கோரிக்கைகள் குறித்து விரிவான விவாதத்தை பாராளுமன்றம் நடத்தும். இதேபோன்று மேல்-சபையில் தகவல் ஒலிபரப்புத்துறை, பணியாளர் நலன், ரெயில்வே, குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் துறைகளுக்கான விவாதமும் நடைபெறும்.

    மேலும் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவைகள் வரி துணைச்சட்ட மசோதாக்களும் இந்த கூட்டத்தொடரில் கொண்டு வந்து நிறைவேற்றப்படும்.

    அடுத்த மாதம் 12-ந்தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவுக்கு வரும். 
    Next Story
    ×