search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி.-மணிப்பூரில் பிரசாரம் ஓய்ந்தது: நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு
    X

    உ.பி.-மணிப்பூரில் பிரசாரம் ஓய்ந்தது: நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு

    உத்தர பிரதேசத்தில் 6-வது கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைந்தது. இதேபோல், முதல் கட்ட தேர்தல் நடைபெறும் மணிப்பூர் தொகுதிகளிலும் பிரசாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் 5 கட்டமாக 313 தொகுதிகளில் தேர்தல்கள் நடந்து முடிந்து விட்டது. 6-வது கட்டமாக மகராஜ் கஞ்ச், குஷிநகர், கோரக்பூர், தியோரியா, அசம்கார், மாவ், பல்லியா ஆகிய மாவட்டங்களில் அடங்கியுள்ள 49 தொகுதிகளில் நாளை மறுநாள் (மார்ச் 4) தேர்தல் நடக்கிறது.

    இந்த தொகுதிகளில் கடந்த சில நாட்களாக அனல் பறக்கும் பிரசாரத்தில் தலைவர்கள் ஈடுபட்டனர். பிரதமர் மோடி நேற்று தியோரியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் பேச ஆதரவு திரட்டினார். அப்போது விவசாயிகளுக்கு பல்வேறு வாக்குறுதிகள் அளித்தார்.

    உத்தரப்பிரதேசத்தில் பா.ஜனதாவுக்கு 3-ல் இரு பங்கு மெஜாரிட்டி கிடைக்கும் என்றும், அல்லது 4-ல் 3 பங்கு மெஜாரிட்டி கிடைக்கும் என்றும் பேசப்பட்டு வருவதாகவும் மோடி குறிப்பிட்டார். மாயாவதி ஆட்சியில் நடந்த ஊழல்கள் பற்றி விசாரணை நடத்தப்படும் என்று அகிலேஷ் யாதவ் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும் மோடி குற்றம் சாட்டினார்.

    மோடியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் தேவ்ரியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் பேசினார். மத்தியில் 3 ஆண்டு கால ஆட்சியில் பிரதமர் மோடி செய்த பணிகள் என்ன? செல்லாத ரூபாய் நோட்டு நடவடிக்கையால் மக்களை இன்னலுக்கு ஆளாக்கினார் என்று தாக்கிப் பேசினார்.

    கடந்த சில நாட்களாக நடந்த இறுதிக்கட்ட பிரசாரம் இன்றுடன் முடிந்தது. இன்று வேட்பாளர்கள் தொகுதி முழுவதும் வந்து இறுதி கட்ட ஆதரவு திரட்டினார்கள்.

    இதேபோல் மொத்தம் 60 தொகுதிகள் கொண்ட மணிப்பூர் சட்டசபைக்கு இரு கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடக்கிறது. அங்கு காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. முதல் முறையாக பா.ஜனதாவும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

    பிரதமர் மோடி மணிப்பூரில் தேர்தல் பிரசாரம் செய்து பல்வேறு வாக்குறுதிகள் அளித்து பேசினார். காங்கிரசுக்கு ஆதரவாக துணைத்தலைவர் ராகுல் காந்தி, முதல்-மந்திரி ஓக்ராம் இபோபி சிங்குடன் இணைந்து பிரசாரம் செய்தார். கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்த தீவிர பிரச்சாரம் இன்று மாலை 3 மணியுடன் ஓய்ந்துள்ளது. நாளை மறுநாள் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
    Next Story
    ×