search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணிப்பூர் மாநில பொருளாதார முடக்கத்துக்கு முடிவு கட்டப்படும்: மோடி உறுதி
    X

    மணிப்பூர் மாநில பொருளாதார முடக்கத்துக்கு முடிவு கட்டப்படும்: மோடி உறுதி

    மணிப்பூரில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் பொருளாதார முடக்கத்துக்கு முடிவு கட்டப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்தார்.
    இம்பால்:

    மணிப்பூரில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் பொருளாதார முடக்கத்துக்கு முடிவு கட்டப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்தார்.

    வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் அடுத்த மாதம் (மார்ச்) 4 மற்றும் 8-ந் தேதிகளில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.

    இம்பால் மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட லாங்ஜிங் அச்சவுபா மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற் றிய அவர் மாநில காங்கிரஸ் அரசையும், முதல்-மந்திரி இபோபி சிங்கையும் கடுமையாக விமர்சித்தார். பிரசாரத்தின் போது அவர் கூறியதாவது:-

    ஒட்டுமொத்த இந்தியாவும் வளர்ச்சியடைய வேண்டுமென்றால் வடகிழக்கு பிராந்தியம் முன்னேற வேண்டியது மிகவும் முக்கியம். எனவே இதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மத்திய அரசு கிழக்கு சார்ந்த கொள்கையை செயல்படுத்தி உள்ளது.

    கடந்த 15 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் மணிப்பூரின் வளர்ச்சி முடங்கிப்போய் உள்ளது. வேலைவாய்ப்புகள், உள்கட்டமைப்பு, சரியான குடிநீர் வசதிகளை ஏற்படுத்த மாநில அரசு தவறிட்டது. இதனால் மணிப்பூரை ஒருநாள் ஆள்வதற்கு கூட காங்கிரஸ் கட்சிக்கு உரிமை இல்லை.

    எனவே 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய பா.ஜனதாவுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். காங்கிரஸ் கட்சியால் செய்ய முடியாததை நாங்கள் செய்வோம். அவர்கள் 15 ஆண்டுகளில் செய்ய முடியாததை வெறும் 15 மாதங்களில் செய்து முடிப்போம்.

    நாகா கட்டமைப்பு ஒப்பந்தம் தொடர்பாக முதல்-மந்திரி இபோபி சிங் தவறான பிரசாரம் மேற்கொண்டு, மக்களை தவறாக வழிநடத்தி வருகிறார். ஆனால் இந்த ஒப்பந்தம் போடப்பட்டு 1½ ஆண்டுகள் கடந்த பிறகும் கூட, இது தொடர்பாக எனக்கு அவர் கடிதம் எழுதவில்லை. எனினும் அந்த ஒப்பந்தத்தில் மணிப்பூர் நலனை பாதிக்கும் வகையில் ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை.

    மணிப்பூரில் காலவரையற்ற பொருளாதார முடக்கம் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் போடப்பட்டு இருக்கும் தடைகளை அகற்றி சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதுடன், மக்களுக்கு உணவு, பெட்ரோலிய பொருட்கள் மற்றும் மருந்துகளை வழங்க வேண்டியது மாநில அரசின் கடமை ஆகும். ஆனால் இந்த தடங்கலை போக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே மணிப்பூரில் அடுத்த அரசை பா.ஜனதா அமைப்பது உறுதி. அப்படி ஆட்சிக்கு வந்தால் எந்த விதமான பொருளாதார முடக்கத்தையும் இங்கு அனுமதிக்கமாட்டோம். பொருளாதார தடங்கலுக்கு முடிவு கட்டுவதுடன், மாநிலத்தை எப்படி நிர்வகிப்பது? என்பதையும் பா.ஜனதா காண்பிக்கும்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். 
    Next Story
    ×