search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேள்வித்தாளை கசிய விட்ட விவகாரம்: பீகாரில் தேர்வாணைய தலைவர் கைது
    X

    கேள்வித்தாளை கசிய விட்ட விவகாரம்: பீகாரில் தேர்வாணைய தலைவர் கைது

    பீகாரில் முன்கூட்டியே கேள்வித்தாளை கசிய விட்டு ஊழல் வழக்கில் தேர்வாணைய தலைவரை சிறப்பு புலனாய்வு படையினர் கைது செய்தனர்.
    பாட்னா:

    பீகாரில் கடந்த 8-ந் தேதி மாநில அரசில் குமாஸ்தா வேலைக்கு (கிளார்க்கு) ஆட்களை தேர்வு செய்வதற்கான தேர்வினை பீகார் பணியாளர் தேர்வாணையம் நடத்த இருந்தது. ஆனால் அதற்கான கேள்வித்தாளை முன்கூட்டியே கசிய விட்டு, ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்த தேர்வு ரத்தானது.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தியதில், இதில் தேர்வாணையத்தின் தலைவர் சுதிர் குமாருக்கு முக்கிய தொடர்பு இருப்பது தெரிய வந்தது.



    இதையடுத்து அவரையும், இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேரையும் சிறப்பு புலனாய்வு படையினர் ஜார்கண்ட் மாநிலம், ஹசாரிபாக்கில் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் சுதிர் குமாரின் நெருங்கிய உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆனால் சுதிர் குமார் கைது செய்யப்பட்டிருப்பதற்கு மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதுடன், இந்த விவகாரத்தை முதல்-மந்திரியிடம் எடுத்துச்செல்லப்போவதாக கூறி உள்ளது.

    அத்துடன், இந்த விவகாரத்தில் விசாரணை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதிசெய்ய சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
    Next Story
    ×