search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெற்றிக் கொண்டாட்டம்: மும்பையில் சிவ சேனா - பா.ஜ.க. தொண்டர்கள் மோதல்
    X

    வெற்றிக் கொண்டாட்டம்: மும்பையில் சிவ சேனா - பா.ஜ.க. தொண்டர்கள் மோதல்

    மும்பையில் சிவ சேனா தொண்டர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது பா.ஜ.க. அலுவலகம் அருகில் பட்டாசு வெடித்ததால் இரு தரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது.
    மும்பை:

    மகாராஷ்டிராவில் உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகின்றன. சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்த சிவசேனாவும் பா.ஜ.க.வும் இந்த தேர்தலில், தனித்தனியாக களமிறங்கின. இதனால் உள்ளாட்சி அமைப்புகளில் இரு கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது.

    குறிப்பாக மும்பை மாநகராட்சியைப் பொருத்தவரையில், மாநகராட்சியை கைப்பற்றுவதில் சிவ சேனாவுக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இன்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே சிவசேனா வேட்பாளர்கள் அதிக வார்டுகளில் முன்னிலை பெறத் தொடங்கினர். இதனால் பா.ஜ.க.வுக்கு பின்னடைவு ஏற்பட்டது.

    மதிய நிலவரப்படி மொத்தம் உள்ள 227 வார்டுகளில் சிவசேனா 85 வார்டுகளிலும், பா.ஜ.க. 52 வார்டுகளிலும் முன்னிலை பெற்றனர். காங்கிரஸ்-16, நவநிர்மாண் சேனா-9, தேசியவாத காங்கிரஸ்-6, பிற வேட்பாளர்கள் 5 என முன்னிலை நிலவரம் இருந்தது. இந்த வெற்றியை சிவ சேனா தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில், தாதரில் உள்ள தாதாகாசேக் பால்கே மார்க் பகுதியில் சிவ சேனா பட்டாசு வெடித்து கொண்டாடினர். பா.ஜ.க. அலுவலகத்திற்கு வெளியே பட்டாசுகளை வெடித்ததால் பிரச்சனை உருவானது. பா.ஜ.க. மற்றும் சிவ சேனா தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது.

    இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது.

    பின்னர் பாதுகாப்புக்கு வந்த போலீசார், பா.ஜ.க. அலுவலகத்தின் அருகில் திரண்டிருந்த சிவ சேனா தொண்டர்களை அந்த இடத்தைவிட்டு செல்லும்படி கேட்டுக்கொண்டனர். சிவசேனா தொண்டர்கள் சென்றபிறகே அங்கு இயல்பு நிலை திரும்பியது.
    Next Story
    ×