search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லஞ்சம் வாங்கியதாக வருவாய்த் துறை அதிகாரி உள்பட 4 பேர் கைது
    X

    லஞ்சம் வாங்கியதாக வருவாய்த் துறை அதிகாரி உள்பட 4 பேர் கைது

    கிரிக்கெட் சூதாட்டக்காரர்களிடம் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக இந்திய வருவாய்த்துறை மற்றும் அமலாக்கத்துறையை சேர்ந்த அதிகாரிகள் உள்பட 4 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது.
    புதுடெல்லி:

    கிரிக்கெட் சூதாட்டக்காரர்களிடம் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக இந்திய வருவாய்த்துறை மற்றும் அமலாக்கத்துறையை சேர்ந்த அதிகாரிகள் உள்பட 4 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது.

    2013-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ரூ.2 ஆயிரம் கோடி வரை சூதாட்டம் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கையும், ரூ.5 ஆயிரம் கோடி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கையும் குஜராத் மாநிலத்தில் உள்ள அமலாக்க பிரிவு விசாரித்து வருகிறது. இந்த 2 வழக்குகளிலும் அப்ரோஸ் பத்தா என்பவர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார்.

    இந்த வழக்குகளை அமலாக்கத்துறை இணை இயக்குனரான ஜே.பி.சிங்கும் அவருடைய தலைமையில் அதிகாரிகள் சிலரும் விசாரித்து வந்தனர். அப்போது அவர்கள் குற்றவாளிகளிடம் லஞ்சம் வாங்கியதாக டெல்லி அமலாக்கத்துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

    இந்த நிலையில் ஜே.பி.சிங், தான் முன்பு பணியாற்றி வந்த இந்திய வருவாய்த் துறைக்கே மாற்றப்பட்டார். தற்போது அவர் சுங்கம் மற்றும் கலால் துறை பிரிவில் கமிஷனர் அந்தஸ்து பெற்ற அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

    ஜே.பி.சிங்கும், அமலாக்கத்துறையின் சில அதிகாரிகளும் லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்ட புகார் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தது. அப்போது கிரிக்கெட் சூதாட்டம் மற்றும் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்குகளில் குற்றவாளிகளுக்கு சாதகமாக நடந்துகொள்வதற்காக ஜே.பி.சிங்கும், மற்றவர்களும் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து அவரையும், அமலாக்கத்துறை அதிகாரி சஞ்சய் மற்றும் தனி நபர்கள் விமல் அகர்வால், சந்த்ரேஷ் பட்டேல் ஆகியோரையும் சி.பி.ஐ. நேற்று கைது செய்தது.

    Next Story
    ×