search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மராட்டிய அரசுக்கு அளிக்கும் ஆதரவு தற்காலிகமானது தான்: சிவசேனா திடீர் அறிவிப்பு
    X

    மராட்டிய அரசுக்கு அளிக்கும் ஆதரவு தற்காலிகமானது தான்: சிவசேனா திடீர் அறிவிப்பு

    மராட்டிய மாநிலத்தில் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சிக்கு ஆதரவாக நாங்கள் அளித்துவரும் ஆதரவு தற்காலிகமானது தான் என்று சிவசேனா அறிவித்துள்ளது.
    மும்பை:

    2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற மராட்டிய மாநில சட்டசபை தேர்தலையடுத்து, அங்கு ஆட்சி அமைக்க பாரதிய ஜனதா கட்சிக்கு போதுமான உறுப்பினர்கள் எண்ணிக்கை இல்லாததால், பா.ஜ.க.வின் நீண்டகால தோழமை கட்சியான சிவசேனா நேசக்கரம் நீட்டியது.

    சிவசேனா எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் அங்கு முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மும்பை உள்ளிட்ட 10 நகராட்சிகளுக்கு வரும் 21-ம் தேதி (நாளை) தேர்தல் நடைபெறுகிறது. மராட்டிய மாநிலத்தில் இத்தனை காலமாக பாராளுமன்றம், சட்டசபை மற்றும் உள்ளாட்சி தேர்தல்களை  பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து சந்தித்துவந்த சிவசேனா தற்போது மும்பை நகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது.

    மும்பையை பொருத்தவரை சிவசேனா கட்சிக்கு செல்வாக்கு அதிகம் என்பதை அறிந்து வைத்துள்ள முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், இந்த தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களை கைப்பற்றியாக வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சிவசேனா தொண்டர்களும் பா.ஜ.க.வுக்கு சளைக்காமல் களப்பணியாற்றி வருகின்றனர். இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்தும், தாக்கியும் பேசி மக்களிடையே ஆதரவு திரட்டிய நிலையில் பிரசாரம் ஓய்ந்து நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சிக்கு ஆதரவாக நாங்கள் அளித்துவரும் ஆதரவு தற்காலிகமானது தான் என்று சிவசேனா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னா பத்திரிகையில் இன்று வெளியாகியுள்ள தலையங்க கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தன்னுடைய முதல் மந்திரி நாற்காலி சிவசேனாவின் தயவால் அமைந்துள்ளது என்பதை மறந்துவிட்டு தேவேந்திர பட்னாவிஸ் மும்பை தொடர்பாக நாள்தோறும் புதுப்புது வாக்குறுதிகளாக வெளியிட்டு வருகிறார். ஆனால், அவருடைய எதிர்காலமே நிரந்தரமில்லாதது என்பதை மறந்துவிட்டு, மும்பையின் எதிர்காலத்தை மாற்றப் போவதாக அவர் கூறி வருகிறார்.

    மராட்டிய மாநிலம் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக அவரது ஆட்சிக்கு நாங்கள் (சிவசேனா) அளித்துவரும் ஆதரவு தற்காலிகமானதுதான் என்பதை அவர் மறந்து விடக்கூடாது.

    இவ்வாறு அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

    288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய மாநில சட்டசபையில் ஆளும்கட்சியான பா.ஜ.கவின் பலம் 122 ஆகவும், சிவசேனாவின் பலம் 63, எதிர்க்கட்சியான காங்கிரசின் பலம் 42, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பலம் 41 உறுப்பினர்கள் ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    நாளை மும்பை உள்ளிட்ட 10 நகராட்சிகளுக்கு நடைபெறும் தேர்தலில் சுமார் 2 கோடி மக்கள் வாக்களிக்கவுள்ள நிலையில், சிவசேனா இன்று வெளியிட்டுள்ள திடீர் அறிவிப்பு, பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×