search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3-வது கட்ட தேர்தல்: உ.பி.யில் 69 தொகுதிகளில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு
    X

    3-வது கட்ட தேர்தல்: உ.பி.யில் 69 தொகுதிகளில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு

    உத்தரப்பிரதேசத்தில் 69 தொகுதிகளில் இன்று விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. மத்திய மந்திரி ராஜ்நாத்சிங், முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் ஆகியோர் தனது வாக்குகளை பதிவு செய்தனர்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதில் கடந்த 11, 15-ந்தேதிகளில் 2 கட்டதேர்தல் நடந்துள்ளது. மொத்தம் 140 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

    3-வது கட்டமாக 69 தொகுதிகளில் ஓட்டுப் பதிவு இன்று காலை 7 மணிக்கு விறுவிறுப்பாக தொடங்கியது. வாக்குப்பதிவையொட்டி வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பெரும்பாலான தொகுதிகள் பதட்டமானவை என அறிவிக்கப்பட்டு மத்திய படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இன்றைய தேர்தலில் மொத்தம் 2.41 கோடி பேர் வாக்களிக்கிறார்கள். 826 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 12 மாவட்டங்களில் 69 தொகுதிகளிலும் 16,671 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் லக்னோவில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று காலை வாக்குப்பதிவு செய்தார். முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் சாய்பாய் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தார்.

    காலை 9 மணி நிலவரப்படி 12 சதவீதம் வாக்கு பதிவானது. மாலை 5 மணி வரை இடைவிடாது ஓட்டுப்பதிவு நடக்கிறது. இன்று ஓட்டுப்பதிவு நடைபெறும் 12 மாவட்டங்களும் சமாஜ்வாடி கட்சிக்கு செல்வாக்கு உள்ளவையாகும். ஆனால் சமீபத்தில் அக்கட்சியில் பிளவு ஏற்பட்டு அகிலேஷ் யாதவ் கட்சியை கைப்பற்றினார். அதன்பிறகு தற்போது தேர்தல் நடைபெறுகிறது.

    எனவே சமாஜ்வாடி கட்சி செல்வாக்கை தக்கவைத்துக் கொள்ளுமா? என்பது இன்றைய வாக்குப்பதிவின் முடிவில் தெரிந்துவிடும்.
    Next Story
    ×