search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசியல் களத்தை நிர்ணயிக்க இருக்கும் சொத்து குவிப்பு வழக்கு
    X

    தமிழக அரசியல் களத்தை நிர்ணயிக்க இருக்கும் சொத்து குவிப்பு வழக்கு

    தமிழக அரசியல் களத்தை நிர்ணயிக்க இருக்கும் சொத்து குவிப்பு வழக்கு கடந்து வந்த பாதையை விரிவாக கீழே காணலாம்...
    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவர்கள் நால்வருக்கும் பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தண்டனையை கர்நாடக ஐகோர்ட்டு ரத்து செய்து அவர்களை விடுதலை செய்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்குகிறது. தமிழக அரசியல் களத்தை நிர்ணயிக்கும் வகையில் இந்த தீர்ப்பு அமைய இருக்கிறது.

    சொத்து குவிப்பு வழக்கு கடந்து வந்த பாதையை காணலாம்...

    1996 ஜூன்16:- 1991 முதல் 1996-ம் ஆண்டு வரை முதல்-அமைச்சராக பதவி காலத்தில் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக 66 கோடியே 64 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக சென்னை செசன்சு கோர்ட்டில் சுப்பிரமணியசாமி மனு தாக்கல்.

    1996 ஜூன்27:- விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு நீதிபதி உத்தரவு.

    1996 செப்.7:- வழக்கு விசாரணை அதிகாரியாக நல்லம நாயுடு நியமனம்.

    1996 செப்.18:- ஜெயலலிதா மீது வழக்கு பதிவு.

    1996 செப்.19:- ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி வீடுகளில் போலீசார் சோதனை.

    1996 டிச.7:- ஜெயலலிதா கைது-ஊழல் வழக்கு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு.

    1997 ஜன.3:- ஜெயலலிதா ஜாமீனில் விடுதலை; வழக்கை விசாரிக்க சென்னையில் தனிக்கோர்ட்டு அமைப்பு- விசாரணை தொடக்கம்.

    2001 மே.15:- தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி. முதல்-அமைச்சராக ஜெயலலிதா தேர்வு.

    ஜெயலலிதா மீண்டும் முதல்-அமைச்சராக பதவி ஏற்றதால் வழக்கை வேறு மாநில கோர்ட்டுக்கு மாற்றக்கோரி 2003-ம் ஆண்டில் தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    2003 நவ.18:- சொத்து குவிப்பு வழக்கை கர்நாடக மாநிலத்துக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு.

    2003 டிச.27:- ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்க பெங்களூருவில் தனிக்கோர்ட்டு அமைக்கப்பட்டது.

    2014 செப்.27:- ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், மற்ற மூவருக்கும் தலா ரூ.10 கோடியும் அபராதம் விதித்து தனிக்கோர்ட்டு நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்கா தீர்ப்பு வழங்கினார். இதைத்தொடர்ந்து நால்வரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

    2014 செப்.29:- ஜாமீன் கேட்டு நால்வரும் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல்.

    2014 அக்.7:- கர்நாடக ஐகோர்ட்டு ஜாமீன் வழங்க மறுப்பு.

    2014 அக்.17:- ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வருக்கும் சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

    2014 அக்.18:- நால்வரும் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

    2014 டிச.8:- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, தனிக்கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரும் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு ஆவணங்களை தாக்கல் செய்தனர்.

    2014 டிச.18:- கர்நாடக ஐகோர்ட்டு சிறப்பு அமர்வு அமைத்து மேல்முறையீட்டு மனுக்களை 3 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு.

    2015 ஜன.1:- மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க தனி நீதிபதியாக குமாரசாமி நியமனம்.

    2015 மே.11:- ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனை விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    2015 ஜூன்23:- கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

    இதேபோல் தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகனும் மேல்முறையீடு செய்தார்.

    மேலும் சொத்துகுவிப்பு வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் 6 நிறுவனங்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்தும் ஒரு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த 3 மனுக்களையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. கர்நாடக அரசின் சார்பில் அரசு வக்கீல்கள் பி.வி.ஆச்சார்யா, அரிஸ்டாட்டில், மூத்த வக்கீல் துஷ்யந்த் தவே ஆகியோரும், அன்பழகன் சார்பில் மூத்த வக்கீல்கள் அந்தியர்ஜூனா, விகாஸ் சிங், வி.ஜி.பிரகாசம், வக்கீல் பிரபு சுப்பிரமணியம் ஆகியோரும், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் தரப்பில் மூத்த வக்கீல் நாகேஸ்வரராவ், சேகர் நாப்டே, அரிமா சுந்தரம் ஆகியோரும் ஆஜராகி வாதாடினார்கள்.

    2016 ஜூன் 7:- இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில், நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

    2017 பிப்.14:- தீர்ப்பு வழங்கும் நாள்.

    Next Story
    ×