search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகிழ்ச்சியாக இருப்பது அதிக மதிப்பெண்களை பெற்றுத்தரும்: மோடி
    X

    மகிழ்ச்சியாக இருப்பது அதிக மதிப்பெண்களை பெற்றுத்தரும்: மோடி

    தேர்வு நேரத்தில் மகிழ்ச்சியாக இருப்பது அதிக மதிப்பெண்களை பெற்றுத் தரும் என்று வானொலி உரையில் மாணவ-மாணவிகளுக்கு பிரதமர் மோடி கூறினார்.
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி மாதந் தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமை ‘மன் கீ பாத்’(மனதில் இருந்து பேசுகிறேன்) என்ற தலைப்பில் வானொலியில் உரையாற்றுவது வழக்கம். ஜனவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று அவர் ஆற்றிய உரை மாணவ-மாணவிகளின் தேர்வு பயத்தை போக்குவது, அதிக மதிப்பெண்கள் எடுப்பது ஆகிவற்றுக்கு ஆலோசனையும், அறிவுரை யும் கூறுவதாக இருந்தது.

    இதுதவிர, குடியரசு தின கொண்டாட்டம், மகாத்மா காந்தி நினைவு தினம், கடலோர காவல்படை தினம் ஆகியவை குறித்தும் மோடி நினைவு கூர்ந்தார்.

    அவர் பேசும்போது கூறியதாவது:-

    இந்த ஆண்டு குடியரசு தினத்தில் பாதுகாப்பு படையில் தீரச் செயல் புரிந்ததற்காக எந்தெந்த வீரர்கள் கவுரவிக்கப்பட்டனரோ, அவர்களைப் பற்றி இரண்டொரு நல்ல வார்த்தைகளை சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் எழுத வேண்டும். நண்பர்களோடு அவற்றை பகிர்ந்து கொள்ளுங்கள்.

    அவர்களின் சாகசம், வீரம், தீரம் பற்றிய செய்திகளை நாம் ஆழமாக தெரிந்து கொள்ளும்போது, நமக்கு ஆச்சரியம், பெருமிதம், உத்வேகம் ஆகியவை ஒரு சேர ஏற்படும்.

    இன்று ஜனவரி 30-ந்தேதி நமது வணக்கத்துக்கு உரிய அண்ணல் மகாத்மா காந்தியடிகள் மறைந்த நாள். இந்த நாளில் நாம் அனைவரும் காலை 11 மணிக்கு 2 நிமிடம் மவுனம் அனுசரித்து தேசத்துக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவோம். ஒரு சமுதாயம் என்ற வகையிலும், ஒரு நாடு என்ற முறையிலும் ஜனவரி 30-ந்தேதி அன்று காலை 11 மணிக்கு 2 நிமிடங்கள் அஞ்சலி செலுத்துவது இயல்பாக அமைந்திட வேண்டும்.

    கடலோர காவல் என்பது உலகின் மிகப்பெரிய விஷயமாக மாறியிருக்கும் நிலையில் பிப்ரவரி 1-ந்தேதி 40-வது இந்திய கடலோர காவல்படை தினத்தை முன்னிட்டு அப்படையினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறும் பொதுத்தேர்வு குறித்து மாணவர்களின் கேள்விகளுக்கு பிரதமர் பதில் அளித்தார்.

    சிருஷ்டி என்பவர், தேர்வு காலங்களில் வீட்டில், அக்கம் பக்கத்தில், சமூகத்தில் அச்சம் உருவாகும் சூழ்நிலையை எப்படி மகிழ்ச்சியாக மாற்றுவது என்று கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்து பிரதமர் மோடி கூறியதாவது:-

    பெரும்பாலானோருக்கு தேர்வு காலம், அழுத்தம் நிறைந்ததாக அமைந்து விடுகிறது. இதை நீங்கள் மகிழ்ச்சியான காலமாக கருதுகிறீர்களா அல்லது நெருக்கடி நிறைந்த நேரமாக உணர்கிறீர்களா? என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். யாரெல்லாம் சந்தோஷமான காலமாக கருதுகிறார்களோ, அவர்கள் வெற்றி அடைகின்றனர். யாரெல்லாம் அழுத்தம் நிறைந்த நேரமாக நினைக்கின்றனரோ, அவர்கள் கவலை கொள்கின்றனர்.

    எனவே, புன்சிரிப்புடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள். அதிக மதிப்பெண்களை பெறுங்கள். இந்த நேரத்தில் நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்களோ அவ்வளவு சிறப்பான மதிப்பெண்கள் உங்களுக்கு கிடைக்கும். ஒரு சந்தோஷமான மனதுதான் அதிக மதிப்பெண்களுக்கான திறவுகோல். தேர்வு காலம் என்பது ஒரு கொண்டாட்டம். அதை ஒரு பண்டிகை, திருவிழா என உற்சாகமாக எடுத்துக் கொள்ளவேண்டும்.

    தேர்வை தவிர பல சவால் களை எதிர்கொள்ளவேண்டிய சந்தர்ப்பங்கள் உங்களுக்கு வாழ்க்கையில் வந்திருக்கும். எனவே தேர்வுகளை வாழ்க்கையின் வெற்றி தோல்வியாக எடுத்துக் கொள்ளும் எண்ணத்தில் இருந்து நாம் விடுபட வேண்டும்.

    மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம், இதற்கு ஒரு பெரிய உதாரணமாக திகழ்கிறார். அவர் விமானப் படை வேலையில் சேருவதற்காக சென்றார். ஆனால் தோல்வி கண்டார். ஒருவேளை அவர் அந்த தோல்வியில் துவண்டு வாழ்க்கையில் தோற்றுப் போயிருந்தார் என்றால் நமது நாட்டுக்கு இவ்வளவு பெரிய விஞ்ஞானி கிடைத்திருப்பாரா? இவ்வளவு அருமையான ஜனாதிபதி நமக்கு கிடைத்து இருப்பாரா?...

    எனவே, உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். தேர்வு எழுதச் செல்லுங்கள். ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்ளும் முன்பாக அதை கொண்டாட்டமாக மாற்றுங்கள். பிறகு சவால், சவாலாகவே இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×