search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெங்களூருவில் திருவள்ளுவர் திருநாள்: தமிழர் - கன்னடர் ஒற்றுமை பேரணி
    X

    பெங்களூருவில் திருவள்ளுவர் திருநாள்: தமிழர் - கன்னடர் ஒற்றுமை பேரணி

    திருவள்ளுவரின் 2048-வது பிறந்த நாளை முன்னிட்டு பெங்களூரு தமிழ்சங்கத்தின் சார்பில் பெங்களூரில் நேற்று திருவள்ளுவர் திருநாள் விழா மற்றும் தமிழர் - கன்னடர் ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டது.
    பெங்களூரு:

    திருவள்ளுவரின் 2048-வது பிறந்த நாளை முன்னிட்டு பெங்களூரு தமிழ்சங்கத்தின் சார்பில் பெங்களூரில் நேற்று திருவள்ளுவர் திருநாள் விழா மற்றும் தமிழர் - கன்னடர் ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டது.

    அல்சூர் ஏரி எதிரே நா.நீலகண்டன சதுக்கத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மந்திரிகள் ஜார்ஜ், ரோ‌ஷன் பெய்க், பா.ஜ.க.எம். பி.சி. மோகன், உத்தரகண்ட் மாநில பா.ஜ.க.முன்னாள் எம்.பி. தருண் விஜய், நிடுமாமுடி மடத்தின் பீடாதிபதி வீரபத்ர சென்னமல்ல சுவாமிகள் மாநகராட்சி மேயர் பத்மா, பெங்களூரு தமிழ்ச்சங்கத் தலைவர் தாமோதரன், உள்ளிட்ட ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    விழாவில் பா.ஜ.க. முன்னாள் எம்.பி.தருண் விஜய் பேசியதாவது:-

    தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய போராட்டம் இந்தியாவுக்கே முன்னுதாரணமாகியுள்ளது. தமிழக மக்கள் உன்னதமானவர்கள் என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்துள்ளனர்.

    சோகரும், சந்திரகுப்த மெளர்யா பற்றி அறிந்துகொள்வது மட்டும் இந்திய வரலாறு அல்ல. தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டியர்களும் இந்திய வரலாற்றில் முக்கியமானவர்கள் என்பதை அறியவேண்டும். ஆண்டாள், கண்ணகி, சுப்ரமணியபாரதி, திருவள்ளுவர் ஆகியோரையும் வட இந்தியர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

    தமிழர்களின் பண்பாடு மிகவும் தொன்மையானது. சிந்து வெளி நாகரிக காலத்திலேயே ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்தப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாகும். ஜல்லிக்கட்டுக்காக தமிழர்கள் அமைதி வழியில் நடத்திய போராட்டம் உலக மக்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

    2 ஆண்டுகளுக்கு முன் கங்கைக்கரையில் ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலையை வைத்தேன். அதேபோல, இந்தியா முழுவதும் திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாற்றைப் பரப்ப வேண்டும். வட இந்தியக் கல்லூரிகளில் திருவள்ளுவர் குறித்த வினாடி - வினாவை பல்கலைக்கழக மானியக்குழு அல்லது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறேன். இதன்மூலம் திருவள்ளுவரை வட இந்தியாவுக்கு அறிமுகம் செய்யவுள்ளோம். உத்தரகண்ட் மாநிலத்தில் நான் பிறந்திருந்தாலும், நான் தமிழன்னையின் மகன் என்று அறியப்படவே விரும்புகிறேன்.

    தமிழர்கள் தங்கள் பண்பாட்டுக்கூறுகளை எந்தக் காலத்திலும் சமரசம் செய்துகொள்ளக்கூடாது. உலகின் உன்னதமான பண்பாடு தமிழர்களுடையது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். இந்தியாவின் ஒருமைப்பாடு காக்கப்பட வேண்டுமானால், திருவள்ளுவரின் திருக்குறளை வட இந்தியர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

    நாடாளுமன்றத்தில் திருவள்ளுவர் விழா நடத்தியபோது அனைத்துக் கட்சி தலைவர்களும் கலந்துகொண்டனர். அரசியல் கட்சிகளை போல தமிழர்களை ஒன்றுசேர்க்கும் திருவள்ளுவரின் சிந்தனைகளை உலகம் முழுவதும் பரப்புவதே என் குறிக்கோள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருவள்ளூவர் நாள் பேரணியில் கர்நாடக தமிழர்கள் குடும்பம் குடும்பமாக உற்சாகமாக கலந்து கொண்டனர். முதியோர், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் பதாகைகளுடன் கலந்து கொண்டனர்.

    திருவள்ளுவர் சிலை அமைந்திருக்கும் நா.நீலகண்டன் சதுக்கத்தின் முன்பகுதியில் அமைக்கப் பட்டிருந்த மேடையில் இருந்தப்படியே தமிழர்-கன்னடர் ஒற்றுமை பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.

    பேரணியில் திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டிருந்த தேர் முன் செல்ல, ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஊர்வலமாக பின்தொடர்ந்து நடந்து சென்றனர். இப்பேரணி காமராஜர் சாலை, செயின்ட் ஜார்ஜ் தேவாலய சாலை, சிவன்செட்டி தோட்டம் வழியாக பெங்களூரு தமிழ்சங்கத்தை வந்தடைந்தது.

    பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கலந்துகொண்டு திருவள்ளுவர் வாழ்க, திருவள்ளுவர் நெறி வாழ்க்கை நெறி, தமிழ்வாழ்க என்பன போன்ற கோ‌ஷங்கள் முழங்கியவாறு வழிநெடுக 1330 திருக்குறள்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் வாசிக்கப்பட்டன. இதைதொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
    Next Story
    ×