search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி. தேர்தல்: சமாஜ்வாடி கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலில் சிவபால் யாதவ்
    X

    உ.பி. தேர்தல்: சமாஜ்வாடி கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலில் சிவபால் யாதவ்

    உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான சமாஜ்வாடி கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலில், சிவபால் யாதவ் இடம்பெற்றுள்ளார்.
    லக்னோ:

    இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் நாடு முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. 403 தொகுதிகளை கொண்ட அம்மாநில சட்டசபைக்கு பிப்ரவரி 11-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடக்கிறது.

    முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ், பா.ஜனதா ஆகிய 3 கட்சிகள் இடையே ஆட்சியை கைப்பற்ற கடும் போட்டி நிலவுகிறது. 4-வது கட்சியாக திகழும் காங்கிரஸ் தனித்து போட்டியிட விரும்பவில்லை. அந்த கட்சி அகிலேஷ் யாதவுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியது.

    இதன்படி உத்தரபிரதேச சட்டசபையில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதன்படி அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி 300 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 103 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், சமாஜ்வாடி கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், முதல் மூன்று கட்ட தேர்தலுக்கான 191 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில், அகிலேஷ் யாதவுடன் கருத்து மோதலில் ஈடுபட்டு வந்த அவரது சித்தப்பா சிவபால் யாதவ் இடம்பெற்றுள்ளார். அவர், முலாயம் சிங் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்பட்ட ஜஸ்வந்த் நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

    ஆசம் கான் தனது பாரம்பரிய தொகுதியான ராம்பூரில் போட்டியிடுகிறார். அவரது மகன் அப்துல்லா ஆசம் ஸ்வார் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த மாதம் முலாயம் சிங் யாதவ் வெளியிட்ட பட்டியலில் இடம்பெறாத அகிலேஷ் யாதவின் பல விசுவாசிகளுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இந்த வேட்பாளர் பட்டியலில் சிவபால் யாதவ் பெயரை சேர்த்திருப்பது, அகிலேஷ் யாதவுக்கும் அவரது தந்தைக்கும் இடையே சமரசம் ஏற்பட்டிருப்பதையே காட்டுகிறது.
    Next Story
    ×