search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கான்பூர் ரெயில் விபத்துக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பு சதி? - கைதான 6 பேரிடம் விசாரணை
    X

    கான்பூர் ரெயில் விபத்துக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பு சதி? - கைதான 6 பேரிடம் விசாரணை

    கான்பூர் ரெயில் ரெயில் விபத்து தொடர்பாக 6 பேரை கைதுசெய்து விசாரணை நடத்திவரும் நிலையில், இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் சதி காரணமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
    பாட்னா:

    இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரெயில் உத்தரப் பிரதேசம் மாநிலம் கான்பூர் அருகே கடந்த நவம்பர் 21-ந்தேதி தடம் புரண்டது. 14 பெட்டிகள் கவிழ்ந்ததில் 142 பேர் பலியானார்கள். 200 பேர் காயம் அடைந்தனர்.

    இதே போல டிசம்பர் 28-ந்தேதி கான்பூர் அருகே அஜ்மீர்-சியல்டா எக்ஸ்பிரஸ் ரெயில் கவிழ்ந்ததில் 44 பேர் பலியானார்கள்.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ரெயில் தடம்புரண்டு கவிழ்ந்ததற்கு நாசவேலை காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் மாநில போலீசாரும், ரெயில்வே போலீசாரும் விசாரணை நடத்தி வந்தனர்.

    ரெயில் விபத்து தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் 3 பேர் இந்தியாவிலும், 3 பேர் நேபாளத்திலும் பிடிபட்டனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.

    ரெயில் தண்டவாளத்தில் குக்கர் வெடிகுண்டை ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்க செய்து இந்தூர்- பாட்னா எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்த்ததாக பிடிபட்ட ஒருவன் வாக்குமூலம் அளித்து உள்ளான்.

    இந்த நாசவேலையில் ஈடுபடுவதற்காக அவர்களுக்கு பணம் அளிக்கப்பட்டதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்ததாக பீகார் மாநில உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    அவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக உத்தரப் பிரதேசத்தில் இருந்து தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளும், தேசிய புலனாய்வு அமைப்பினரும் பாட்னா விரைந்து உள்ளனர்.

    இந்த ரெயில் விபத்துக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் சதி காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    கைதான மோதிலால் பஸ்வான், உமாசங்கர் பட்டேல், முகேஷ்ராய் ஆகிய 3 பேரும் பீகார் மாநிலம் சாம்ரான் கிழக்கு பகுதியை சேர்ந்தவர்கள் நேபாளத்தில் இருக்கும் சம்சுல் ஹோடா பணம் கொடுத்து இந்த சதி செயலில் ஈடுபடவைத்தது விசாரணையில் தெரிய வந்தது.

    இதில் ஹோடாவுக்கு ஐ.எஸ்.ஐ. அமைப்புடன் நெருங்கிய தொடர்பு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. நேபாள போலீசார் அவருடன், பிரிஜ்வாசன் கிரி, முஜாத் அன்சாரி ஆகியோரையும் கைது செய்தனர். நேபாளத்தில் கைதான 3 பேரையும் டெல்லி கொண்டு வந்து விசாரணை மேற்கொள்ளப்படும்.
    Next Story
    ×