search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பஞ்சாப் ஊழல் மந்திரிகளை ஜெயிலில் அடைப்போம்: கெஜ்ரிவால் எச்சரிக்கை
    X

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பஞ்சாப் ஊழல் மந்திரிகளை ஜெயிலில் அடைப்போம்: கெஜ்ரிவால் எச்சரிக்கை

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பஞ்சாப் ஊழல் மந்திரிகளை ஜெயிலில் அடைப்போம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

    சண்டிகார்:

    பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த மாதம் 4-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு ஆளும்கட்சியான ஆகாலிதளம் - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

    அதே நேரத்தில் ஆம்ஆத்மி கட்சியும் பஞ்சாப்பில் செல்வாக்காக உள்ளது. அவர்களும் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளனர்.

    இங்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்த கட்சியின் தலைவர் அரவிந்த்கெஜ்ரிவால் சண்டிகாரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பஞ்சாப்பில் பிரகாஷ்சிங் பாதல் ஆட்சியில் ஒட்டுமொத்தமாக ஊழல் நடந்துள்ளது. இதற்கு முதல்-அமைச்சர் பிரகாஷ்சிங் பாதல் முக்கிய காரணமாக இருந்துள்ளார். அவரும், அவரது குடும்பத்தினரும் ஏராளமான சொத்துக்களை குவித்துள்ளனர்.

    இதேபோல அனைத்து மந்திரிகளும் ஊழல் செய்து ஏராளமான சொத்துக்களை சேர்த்திருக்கிறார்கள். அனைத்து ஊழலுக்கும் முதல்-அமைச்சர் தான் காரணம்.

    பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்தால் இவர்களை நாங்கள் சும்மா விடமட்டோம். ஆட்சிக்கு வந்ததுமே சிறப்பு விசாரணை குழு ஒன்று அமைக்கப்படும். இதன் மூலம் முதல்-அமைச்சர் குடும்பத்தினர் ஊழல் செய்து சேர்த்த ஒரு பைசாவை கூட விடமாட்டோம். அனைத்து சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும். இதேபோல ஊழல் மந்திரிகளின் சொத்துக்களையும் பறிமுதல் செய்வோம்.

    இத்துடன் ஊழல் செய்த அனைவரையும் ஜெயிலில் தள்ளுவோம். காங்கிரஸ் முன்னாள் முதல்-மந்திரி அம்ரீந்தர்சிங் சுவிஸ் வங்கியில் பணத்தை சேர்த்து வைத்துள்ளார். அதுபற்றியும் விசாரணை நடத்தப்படும்.

    மாநில பஞ்சாப் மந்திரி பிக்ராம்சிங் மஜிதா போதை மருந்து கடத்தலுக்கு முக்கியமான காரணமாக இருக்கிறார். ஆனால் அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. விசாரணை கூட நடத்தப்படவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அவரை நிச்சயமாக தண்டிப்போம்.

    மார்ச் 11-ந்தேதி தேர்தல் முடிவு வெளிவரும். மார்ச் 22-ந்தேதி நாங்கள் ஆட்சி அமைப்போம். ஏப்ரல் 15-ந்தேதி மந்திரி பிக்ராம்சிங் மஜிதா ஜெயிலுக்கு போவார்.

    அம்ரீந்தர்சிங் காங்கிரசின் முதல்-அமைச்சராக இருந்தபோது ஊழல் செய்து ஏராளமாக சொத்து சேர்த்தார். ஆனால், அதற்கு பிறகு ஆட்சிக்கு வந்த பிரகாஷ்சிங்பாதல் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காப்பாற்றினார். இப்போது பிரகாஷ்சிங் பாதல் போட்டியிடும் தொகுதியில் அம்ரீந்தர்சிங்கும் போட்டியிடுகிறார்.

    அங்கு ஆம்ஆத்மிதான் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. அம்ரீந்தர்சிங் போட்டியிட்டு ஓட்டுகளை பிரித்து அதன்மூலம் பிரகாஷ்சிங் பாதலை வெற்றிபெற செய்ய வைக்க முயற்சிக்கிறார்.

    கிரிக்கெட் வீரர் சித்து காங்கிரசில் சேர்ந்தது பொருத்தமற்றது. இதன் மூலம் அவர் தனது செல்வாக்கை இழந்துவிட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×