search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    “பயங்கரவாதத்துக்கு கடுமையான பதிலடி கொடுப்போம்”: புதிய ராணுவ தளபதி பேட்டி
    X

    “பயங்கரவாதத்துக்கு கடுமையான பதிலடி கொடுப்போம்”: புதிய ராணுவ தளபதி பேட்டி

    எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு கடுமையான பதிலடி கொடுப்போம் என்று புதிய ராணுவ தளபதி பிபின் ராவத் கூறினார்.
    புதுடெல்லி:

    புதிய ராணுவ தளபதியாக பிபின் ராவத், கடந்த 31-ந் தேதி பதவி ஏற்றார். இந்நிலையில், நேற்று அவர் ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது, ‘எதிரிகள், வலியை உணரச் செய்ய வேண்டும்’ என்று ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் கூறியது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பிபின் ராவத் கூறியதாவது:-

    எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு நாம் கடுமையான பதிலடி கொடுப்போம். நாம் பதிலடி கொடுப்பதும், அது, பயங்கரவாதிகளுக்கும், அவர்களுடைய ஆதரவாளர்களுக்கும் வலியை உணரச் செய்வதாக இருக்க வேண்டும் என்பதும் ஏற்றுக்கொள்ள கூடியதுதான்.

    ஆனால், இந்த பதிலடி எல்லா நேரத்திலும் ஒரே மாதிரி இருக்க வேண்டியது இல்லை. இந்த பதிலடியானது, இந்தியாவில் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானின் வியூகத்தை முற்றிலும் பரிசீலனை செய்ய தூண்டும்வகையில் இருக்கும்.

    பாகிஸ்தான் அணு ஆயுத தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டுவது பற்றி கேட்கிறீர்கள். அணு ஆயுதத்தை பயன்படுத்துவது பற்றி பாகிஸ்தான் பரிசீலித்தால், அது போருக்கு தயாராகி விட்டது என்றே அர்த்தம். ஆனால் பாகிஸ்தானின் அறிவிப்புகளுக்கு சர்வதேச நாடுகளிடம் ஆதரவு இல்லை. இருப்பினும், பாகிஸ்தான் இறுதியாக என்ன முடிவு எடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    ஒருவேளை பாகிஸ்தானுடன் மோதும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டால், பாகிஸ்தானின் மிரட்டல், இந்திய அரசை எவ்விதத்திலும் தடுக்க முடியாது.

    ‘அணு ஆயுதங்களை நாங்களாக முதலில் பயன்படுத்த மாட்டோம்’ என்பதுதான் இந்தியாவின் கொள்கை. அதை மறுபரிசீலனை செய்ய வேண்டுமா என்று கேட்டால், எல்லா கொள்கைகளுமே மறுபரிசீலனைக்கு உட்பட்டவைதான். மறுபரிசீலனை அவசியம் என்று நாங்கள் கருதினால், அரசிடம் எடுத்துச் சொல்வோம்.

    இந்தியா ஒரு ஜனநாயக நாடு. அணு ஆயுத கொள்கையை எனது அளவில் முடிவு செய்ய முடியாது. அதை அரசுதான் முடிவு செய்ய முடியும்.

    ராணுவத்தில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி, அதை நவீனப்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. நாங்கள் ராணுவத்தில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள ஆயுதங்களிலும் தொழில்நுட்பத்தை புகுத்துவோம். எல்லா ஆயுதங்களையும் இந்தியாவிலேயே தயாரித்து விட முடியாது. ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது பற்றி இந்தியா பரிசீலித்து வருகிறது.

    இவ்வாறு பிபின் ராவத் கூறினார்.
    Next Story
    ×