search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுவிலக்கை அமல்படுத்தியதால் குற்றங்கள் குறைந்து உள்ளது: நிதிஷ்குமார்
    X

    மதுவிலக்கை அமல்படுத்தியதால் குற்றங்கள் குறைந்து உள்ளது: நிதிஷ்குமார்

    பீகார் மாநிலத்தில் மதுவிலக்கை அமல்படுத்தியதால் குற்றங்கள் குறைந்து உள்ளது என்று முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    சட்டமன்ற தேர்தலில் பிரசாரத்தின்போது தான் வெற்றி பெற்றால் பீகாரில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று நிதிஷ்குமார் வாக்குறுதி அளித்தார்.

    வெற்றி பெற்று மீண்டும் முதல்-மந்திரியானதை தொடர்ந்து அவர் மது விலக்கை அமல்படுத்தி வாக்குறுதியை நிறைவேற்றினார்.

    கடந்த ஏப்ரல் மாதம் பீகாரில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு இருந்தது. இதை பின்பற்றி மற்ற மாநிலங்களும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டு வருகின்றன.

    குஜராத்தில் ஏற்கனவே மதுவிலக்கு அமலில் இருக்கிறது. கேரளாவில் பாதி அளவுக்கு மது கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் மது விலக்கை அமல்படுத்தியதால் பீகாரில் குற்றங்கள் குறைந்து இருப்பதாக நிதிஷ்குமார் கூறியுள்ளார். பாட்னாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் இது தொடர்பாக பேசியதாவது:-

    பூரண மதுவிலக்கில் மாநிலத்தில் சமூக நல்லிணக்கம் மேம்பட்டுள்ளது. பீகாரில் கொலை, கொள்ளை, கடத்தல், வன்முறை போன்ற குற்ற சம்பவங்கள் பெருமளவில் குறைந்து உள்ளன.

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் வரையிலான காலக்கட்டத்தை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் கொலை சம்பவங்கள் முறையே 16 மற்றும் 48 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளன. கலவரம் 37 சதவீதமாகவும், சாலை விபத்து 19 சதவீதமாகவும், விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 21 சதவீதமாகவும் இந்த மாதத்தில் குறைந்துள்ளன.

    மதுவிலக்கால் பீகார் மாநில மக்கள் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி வரை சேமிக்க இயலும்.

    கடந்த 8 மாதத்தில் பால் விற்பனை 11 சதவீதமும், ரசகுல்லா 16 சதவீதமும், குலோப்ஜாம் 15 சதவீதமும் அதிகரித்து உள்ளது. இதேபோல மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டதால் பல்வேறு பொருட்களின் விற்பனையும் அதிகரித்து உள்ளது.

    மக்கள் பணத்தை சேர்த்து தங்கள் குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுக்கிறார்கள்.

    இவ்வாறு நிதிஷ்குமார் பேசினார்.

    பீகாரில் அமல்படுத்தப்பட்டுள்ள மதுவிலக்கை வரவேற்கும் விதமாக ஜனவரி 21-ந்தேதி அன்று பிரமாண்டமான நிகழ்ச்சிக்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதில் 2 கோடி பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×