search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோலார் பேனல் மோசடி வழக்கு: குற்றம் நிரூபிக்கப்படாததால் ஷாலுமேனன் விடுவிப்பு
    X

    சோலார் பேனல் மோசடி வழக்கு: குற்றம் நிரூபிக்கப்படாததால் ஷாலுமேனன் விடுவிப்பு

    சோலார் பேனல் மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நடிகை ஷாலுமேனன், அவரது தாயார் கலாதேவி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவர்களை வழக்கில் இருந்து விடுவிப்பதாக நீதிபதி அறிவித்தார்.
    கேரளாவில் சோலார் பேனல் அமைத்து தருவதாக தனியார் நிறுவனங்களிடம் பல கோடி மோசடி செய்ததாக புகார் கிளம்பியது.

    இது தொடர்பாக பெண் தொழில் அதிபர் சரிதாநாயர் அவரது கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

    இதில் சஜித் என்பவர் தொடர்ந்த வழக்கில் சரிதாநாயரும் அவரது கணவர் பிஜு ராதாகிருஷ்ணனும் சோலார் பேனல் அமைத்து தருவதாகவும், நாகர்கோவிலில் காற்றாலை அமைப்பதாகவும் கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்து விட்டதாக தெரிவித்தார்.

    இந்த மோசடியில் நடிகை ஷாலுமேனன், அவரது தாயார் கலாதேவி மற்றும் மணிகண்டன் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக கூறி இருந்தார்.

    இது தொடர்பான வழக்கு பெரும்பாவூர் கோர்ட்டில் நடந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதில், சரிதா நாயருக்கும், அவரது கணவர் பிஜுராதாகிருஷ்ணனுக்கும் 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

    வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நடிகை ஷாலுமேனன், அவரது தாயார் கலாதேவி மற்றும் மணிகண்டன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவர்களை வழக்கில் இருந்து விடுவிப்பதாக நீதிபதி அறிவித்தார்.

    மேலும் தண்டனை வழங்கப்பட்ட இருவரும் ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருந்த காலத்தை தண்டனை காலத்தில் கழித்து விட்டு மீதி நாட்களை தண்டனையாக அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி கூறி இருந்தார்.

    அதோடு தீர்ப்பை எதிர்த்து மேல் கோர்ட்டில் அப்பீல் செய்யவும் ஒரு மாதம் அவகாசம் கொடுத்திருந்தார். ஏற்கனவே இது தொடர்பான இன்னொரு வழக்கில் சரிதாநாயருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அதனை எதிர்த்து சரிதாநாயர் மேல் கோர்ட்டில் அப்பீல் செய்துள்ளார்.

    அதுபோல இந்த வழக்கிலும் அவர் தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்வார் என தெரிகிறது. தற்போது அவர் ஜாமீனில் வெளியே இருக்கிறார். சரிதாநாயரின் கணவர் பிஜுராதாகிருஷ்ணன் முதல் மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக தற்போது ஜெயிலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×