search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு: உறுப்பினர்களின் கோஷத்தால் கடுப்பான துணை சபாநாயகர்
    X

    மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு: உறுப்பினர்களின் கோஷத்தால் கடுப்பான துணை சபாநாயகர்

    பண ஒழிப்பு நடவடிக்கை, அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஊழல் உள்ளிட்ட பிரச்சினையை எழுப்பி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவையும் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் பெரும்பாலான பகுதி ஒத்திவைப்பிலேயே கடந்துவிட்டது. மத்திய அரசின் பண ஒழிப்பு நடவடிக்கை உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட, அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பா.ஜ.க. உறுப்பினர்கள் எதிர் கோஷம் போடுவதால் அமைதியாக விவாதம் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலை பாராளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது பண ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக காங்கிரஸ் பிரச்சனை எழுப்பியது. இதற்கு பா.ஜ.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

    மாநிலங்களவையிலும் இந்த பிரச்சினை எதிரொலித்தது. பண ஒழிப்பு நடவடிக்கையால் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் அவர்களின் அவல நிலை குறித்து விவாதிக்கக் கோரி காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் நோட்டீஸ் கொடுத்தார். அவரை பேசுவதற்கு துணை சபாநாயகர் அனுமதி அளித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.

    அப்போது, பேசிய குலாம் நபி ஆசாத், முதல் முறையாக ஆளுங்கட்சி அவையை நடத்த விடாமல் இடையூறு செய்வதாக குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து அமளி நீடித்ததால் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    12 மணிக்கு அவை கூடியபோது, பண ஒழிப்பு நடவடிக்கையால் விவசாயிகள் படும் துன்பங்கள் குறித்து குலாம் நபி ஆசாத் பேசினார். ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அகஸ்டாவெஸ்ட்லேண்ட் விவகாரத்தை எழுப்பினர். இதனால் மாநிலங்களவையில் அமளி தொடர்ந்தது. இதனால் 30 நிமிடங்களுக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது. 30 நிமிடம் கழித்தும் அவையை நடத்த முடியாத நிலை நீடித்ததால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

    2 மணிக்கு அவை கூடியபோதும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

    ‘அவையில் இரு தரப்பினருமே அமளியில் ஈடுபடுகின்றனர். விவாதம் நடத்துவதை இரு தரப்பினரும் விரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது’ என்று துணை சபாநாயகர் கடிந்துகொண்டார்.
    Next Story
    ×