search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அடுத்தடுத்த இடையூறுகளால் மக்களவை டிசம்பர் 14-ம் தேதி வரை ஒத்திவைப்பு
    X

    அடுத்தடுத்த இடையூறுகளால் மக்களவை டிசம்பர் 14-ம் தேதி வரை ஒத்திவைப்பு

    உறுப்பினர்களிடையே வாக்குவாதம், பாராளுமன்றத்தை முடக்கியதற்கு எதிர்க்கட்சிகளை மன்னிப்பு கேட்க அரசு வலியுறுத்தியது போன்றவற்றால் கடும் அமளி ஏற்பட்டதையடுத்து மக்களவை டிசம்பர் 14-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
    புதுடெல்லி:

    உயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு தொடர்பாக விவாதத்துடன் கூடிய வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பிரச்சனை எழுப்பி வருகின்றனர். இதன் காரணமாக குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி 16 நாட்கள் ஆகியும் முக்கிய அலுவலர்கள் எதுவும் நடக்கவில்லை. பாராளுமன்றத்தை முடக்கி வரும் எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று பாராளுமன்றம் மீண்டும் கூடியது. மக்களவையில் இன்றைய கூட்டத்திற்கு வந்திருந்த வியட்நாம் தேசிய சபை உறுப்பினர்களை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் வரவேற்றார்.

    பின்னர், டிசம்பர் 13-ம் தேதி விடுமுறை என்பதால், 2001ல் பாராளுமன்ற தாக்குதல் சம்பவத்தை இன்றைய கூட்டத்தில் குறிப்பிட்டு பேசினார். தாக்குதல் நடந்தபோது உள்ளே இருந்தவர்களைப் பாதுகாக்கும் முயற்சியின்போது உயிர்த்தியாகம் செய்த டெல்லி காவல்துறை, ரிசர்வ் போலீஸ் மற்றும் பாராளுமன்ற பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர்களின் தைரியத்தை சபாநாயகர் நினைவுகூர்ந்தார்.

    பின்னர் கேள்வி நேரம் தொடங்குவதாக அறிவித்தார். அப்போது, ரூபாய் நோட்டு பிரச்சனையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எழுப்பி, விவாதத்திற்கு தயாராக இருப்பதாக கூறினார். அப்போது, அவையை முடக்கும் வகையிலான எதிர்க்கட்சிகளின் போராட்டம் குறித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கண்டனம் தெரிவித்ததை சுட்டிக்காட்டி பா.ஜ.க உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். இதனால் இரு தரப்பிற்குமிடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக 11.30 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

    பின்னர், அவை கூடியபோது பாராளுமன்றத்தை 16 நாட்களாக முடக்கியுள்ள எதிர்க்கட்சிகள் மன்னிப்பு கேட்கவேண்டும் என பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி ஆனந்த் குமார் வலியுறுத்தினார். அவருக்கு ஆதரவாக பா.ஜ.க. எம்.பி. மீனாட்சி லேகியும் பேசினார். இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்து கோஷமிட்டனர். எனவே அவையில் கடும் அமளி ஏற்பட்டது. எனவே, 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. 12 மணிக்குப்பிறகும் அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

    பாராளுமன்றத்திற்கு தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை என்பதால், விடுமுறைக்கு பிறகு சபை மீண்டும் 14-ந் தேதி கூடுகிறது.

    Next Story
    ×