search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெடிமருந்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த பீப்பாய்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்திய காட்சி
    X
    வெடிமருந்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த பீப்பாய்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்திய காட்சி

    சபரிமலையில் 360 கிலோ வெடிமருந்து பறிமுதல்: நாசவேலைக்கு சதியா?

    சபரிமலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 360 கிலோ வெடிமருந்துகள் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. வெடிமருந்துகள் நாசவேலைக்காக பதுக்கி வைக்கப்பட்டதா? என்று விசாரணை நடந்து வருகிறது.
    திருவனந்தபுரம்:

    பிரசித்திபெற்ற சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல பூஜை நடந்து வருகிறது. இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைதொடர்ந்து சபரிமலையில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    ஏற்கனவே சபரிமலைக்கு தீவிரவாதிகள் மிரட்டல் உள்ளது. மேலும் டிசம்பர் 6-ந்தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தற்போது கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. அய்யப்ப பக்தர்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.

    சபரிமலை வனப்பகுதியிலும் தீவிர ரோந்து பணி நடந்து வருகிறது. அப்போது சுவாமி அய்யப்பன் கோவில் அருகே உள்ள சபரி பீடத்தில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் புதர் மறைவில் 12 பிளாஸ்டிக் பீப்பாய்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதை திறந்து பார்த்தபோது அதில் வெடிமருந்துகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைதொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் அங்கிருந்த 360 கிலோ வெடி மருந்துகள் அடங்கிய 12 பீப்பாய்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த வெடிமருந்துகள் சபரி மலையில் நாசவேலைக்காக பதுக்கி வைக்கப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

    சபரிமலைக்கு வரும் பக்தர்கள் வெடி வெடித்து வழிபாடு நடத்துவது வழக்கம். வனத்துறை தடை காரணமாக இந்த வெடி வழிபாடு நிறுத்தப்பட்டு உள்ளது. எனவே இந்த வெடி மருந்து வெடி தயாரிப்பதற்கு பயன்படுத்த ஏற்கனவே வாங்கி வைக்கப்பட்டதா? என்பது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது.

    நேற்று சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. இதனால் 12 மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்த பிறகே பக்தர்கள் சுவாமி அய்யப்பனை தரிசிக்க முடிந்தது. நடை திறந்த பிறகு வரும் 3-வது சனிக்கிழமை என்பதால் நேற்று சுவாமி அய்யப்பன் சனிபகவான் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அவருக்கு சனிபகவானுக்கு செய்யப்படும் பூஜைகளை நடைபெற்றது.

    Next Story
    ×