search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணத்தட்டுப்பாடு 30-ந் தேதிக்குள் நீங்கும்: நிதி மந்திரி அருண்ஜெட்லி தகவல்
    X

    பணத்தட்டுப்பாடு 30-ந் தேதிக்குள் நீங்கும்: நிதி மந்திரி அருண்ஜெட்லி தகவல்

    வருகிற 30-ந்தேதிக்குள் பணத்தட்டுப்பாடு நீங்கி விடும். இந்த இடையூறு அனைத்தும் தற்காலிகமானது தான் என மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கில் ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை செல்லாது என கடந்த மாதம் 8-ந்தேதி மத்திய அரசு அறிவித்தது. இதனால் நாடு முழுவதும் பணப்புழக்கம் வெகுவாக குறைந்துள்ளது.

    வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் போதுமான பணம் இல்லாததால் மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

    இந்த இடையூறு அனைத்தும் தற்காலிகமானது தான் என மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார். டெல்லியில் நேற்று நடந்த ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ தலைமைத்துவ மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர் கூறியதாவது:-

    இந்தியாவில் கடந்த 70 ஆண்டுகளாக கருப்பு பணம் கட்டாயம் என்ற நிலை இருக்கிறது. இதற்கு எதிராக போராடி, சாதாரண நிலையை ஏற்படுத்த நாங்கள் விரும்பினோம். இவ்வாறு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் போது இடையூறு ஏற்படுவது இயல்பு தான்.

    ஒரு நாட்டின் 86 சதவீத பணத்தை வாபஸ் பெறும் தேவை ஏற்பட்டால், அதற்கு ஈடுகொடுக்க கணிசமான பகுதி உங்களிடம் இருக்க வேண்டும். ஆனால் பாதுகாப்பான முறையில் பணம் அச்சிடுவதற்கு சிறிது காலம் பிடிக்கும். அந்தவகையில் தற்போது சில இடையூறு ஏற்பட்டு உள்ளதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

    ஆனால் இந்த இடையூறு நீண்ட காலத்துக்கு நீடிக்கும் என நான் நினைக்கவில்லை. வருகிற 30-ந்தேதிக்குள் பணத்தட்டுப்பாடு நீங்கி விடும். ரூபாய் நோட்டு வாபசால் ஏற்பட்டுள்ள தற்போதைய விளைவுகள் அனைத்தும் 3 அல்லது 4 மாதங்கள் வரையே இருக்கும். ஆனால் அதற்கு பிறகு இது நீண்டகால பலன்களை தரும்.

    இப்போதிலிருந்து ஒரு ஆண்டுக்குள் மிகப்பெரிய பொருளாதாரம், உயர்ந்த மற்றும் தெளிவான உள்நாட்டு உற்பத்தியை நாம் காண முடியும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. உயர்ந்த வரித்தளம், வங்கிகளில் அதிக பணம், நியாயமான வட்டிவிகிதம் போன்றவற்றை நீங்கள் பார்க்கலாம்.

    ரூபாய் நோட்டு சீர்படுத்தும் நடவடிக்கையுடன், சரக்கு மற்றும் சேவை வரியும் அமல்படுத்தப்பட்டால் அது இந்தியாவின் வர்த்தகம் மற்றும் மக்களின் வாழ்க்கைத்தரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நான் தனிப்பட்ட முறையில் நம்புகிறேன். மேலும் ஏராளமான டிஜிட்டல் செலவினங்கள், மோசடி செய்ய முடியாத சிறந்த வரிவிதிப்பு முறை உள்ளிட்ட அம்சங்களும் இருக் கும்.

    ரூபாய் நோட்டு வாபசுக்கு பின் வங்கிகளில் சிறிய அளவு டெபாசிட்டுகள் அதிகரித்து உள்ளன. இந்த பணத்தை கொண்டு உள்கட்டமைப்பு, தொழிற்சாலை, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளுக்கு கடன் வழங்க முடியும். இதன் மூலம் பொருளாதாரம் வலுவடையும்.

    கடந்த 2 ஆண்டுகளாக இந்திய பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருகிறது. இதன் மூலம் உலக அளவில் வேகமாக வளரும் மிகப்பெரிய பொருளாதாரம் என்ற சாதனையை தக்க வைத்துக்கொண்டுள்ளது. இந்த வளர்ச்சி இந்த ஆண்டும் தொடரும் வாய்ப்பு உள்ளது.

    சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) பொறுத்தவரை, கடந்த செப்டம்பர் 16-ந்தேதி வெளியிடப்பட்ட ஜி.எஸ்.டி. அறிவிப்பு மற்றும் அரசியல் சாசன திருத்தத்தின்படி நாட்டின் மறைமுக வரிவிதிப்பு முறையை ஓராண்டுக்கு மேல் தொடரமுடியாது. இந்த அரசியல்சாசன கட்டாயத்தின் காரணமாக அடுத்த ஆண்டு செப்டம்பர் 17-ந்தேதிக்கு மேல் ஜி.எஸ்.டி.யை தாமதப்படுத்த முடியாது.

    அதுவரை ஜி.எஸ்.டி. அமலுக்கு வரவில்லை என்றால் பின்னர் நாட்டில் வரிவிதிப்பு இருக்காது. எனவே அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து ஜி.எஸ்.டி.யை அமலுக்கு கொண்டு வருவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

    இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.
    Next Story
    ×